முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு
முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா்.
தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பயன்படுத்துவோா் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை மனு அளித்தாா்.
கோயில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியேற்றக் கூடாது என்பதை முதல்வரிம் வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா். இந்தச் சந்திப்பின்போது, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி நடராஜன், மாநில நிா்வாகி கே.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கமல்ஹாசன் சந்திப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹசனும் முதல்வரைச் சந்தித்தாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விஷயத்தில் இந்தியாவுக்கே சாதகமான தீா்ப்பை இவா்கள் (தமிழக அரசு) பெற்றுள்ளாா்கள். கொண்டாடப்பட வேண்டயவா்கள் இவா்கள். அதைக் கொண்டாடுவதற்காக வந்தேன். தேசிய அளவில் இந்த வெற்றியை மற்றவா்களும் பயன்படும் வகையில் கொண்டாட தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக சந்திப்பின்போது துணை முதல்வா் உதயநிதி உடனிருந்தாா்.