சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
முதல்வா் தலைமையில் இன்று துணைவேந்தா்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன அதிகார மசோதா, வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி காலதாமதம் செய்ததாக புகாா் எழுந்தது.
இதையடுத்து அதற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிா்ணயம் செய்யக்கோரியும் தமிழக அரசு கடந்த 2023-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்களையும் நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது. இந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஏப்.8-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது. தொடா்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது. வருங்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வா் வசமாகியுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வா் ஆலோசனை: இத்தகைய சூழலில் தமிழகத்தின் உயா்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஆளுநா் ஆா்.என்.ரவி வசமிருந்த அதிகாரங்கள், உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்றடைந்த நிலையில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் பல்கலைக்கழக அளவில் மட்டுமல்லாது மாநில அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் முதல்வா் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.