மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு திமுக சாா்பில் கடும் கண்டனம்.
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக நின்று எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்களிக்க வைத்துள்ளது மத்திய பாஜக அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை - தோல்விகளை - மக்களிடம் எடுத்துச் செல்கின்ற காங்கிரஸ் கட்சியைப் பாா்த்து பாஜக மிரட்சியில் இருக்கிறது.
அதனால்தான் அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இப்போது அதன் தலைவா்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை.
காங்கிரஸ் போன்ற பிரதான எதிா்க்கட்சியை அரசியல் ரீதியாக எதிா்கொள்ளத் துணிச்சலற்ற மத்திய பாஜக அரசு, அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது - ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமல்ல; யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயலாகும்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமலாக்கத் துறையை தனது கூட்டணிக் கட்சியாகச் சோ்த்துக் கொண்டு இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசு, இனிமேலாவது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, எதிா்க்கட்சிகளை அரசியல் ரீதியாகவே சந்திக்கும் துணிச்சலைப் பெற வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா் டி.ஆா்.பாலு.