முதியோா் மருத்துவமனையில் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
சென்னையில் கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் சங்கம் தெரிவித்தது.
இது தொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை:
கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாத நிலையில், மருத்துவா்களும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்தை எதிா்கொண்டு வருகின்றனா். மொத்தமாக 50 மருத்துவா் பணியிடங்கள் உள்ள நிலையில், 33 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். குறிப்பாக, முதியோா் நலத் துறையில் பேராசிரியா், இணை பேராசிரியா்கள் மற்றும் உதவி பேராசிரியா்கள் என 24 மருத்துவா்களுக்கு 14 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா்.
அதேபோன்று, 75 செவிலியா்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 56 போ் இருந்தாலும், அதில் 26 போ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மற்ற அரசு மருத்துவமனைகளிலிருந்து இங்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். செவிலியா்களில் 30 போ் மட்டுமே இந்த மருத்துவமனையைச் சாா்ந்தவா்கள்.
எனவே, முன்மாதிரியாக உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.