ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?
முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (மே 11) நடைபெறவுள்ளது.
இந்திய மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 4 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாமிடம் பிடித்தது. ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?
இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இலங்கையை வீழ்த்துமா இந்தியா?
இந்தத் தொடர் முழுவதும் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளது.
பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 201 ரன்கள் குவித்து இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் மற்ற இந்திய வீராங்கனைகளான பிரதீகா ராவல் (164 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (148 ரன்கள்), தீப்தி சர்மா (126 ரன்கள்) எடுத்துள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம், சதம் எடுக்காவிட்டாலும், அவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார்.
இதையும் படிக்க: ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
பந்துவீச்சைப் பொருத்தவரையில் ஸ்நே ராணா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த தொடரில் இலங்கை அணியும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. லீக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஹர்சிதா சமரவிக்கிரம 53 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இரண்டு அரைசதங்களுடன் 177 ரன்கள் குவித்துள்ள சமரவிக்கிரம, இலங்கை அணி வீராங்கனைகளில் அதிக ரன்கள் குவித்தவராக உள்ளார்.
இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து 4 போட்டிகளில் 88 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் அவருடைய சிறப்பான ஆட்டம் வெளிப்படாத நிலையில், இறுதிப்போட்டியில் நன்றாக விளையாட வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
சமபலத்துடன் உள்ள இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.