முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொள்கை முழக்கத்தோடு துவங்கிய இயக்கம்... அன்று’ | அத்தியாயம் 9
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
ஜன்னல் வழியே அந்தப் பொருள் வந்து விழுந்த நொடியில், உறக்கம் கலைந்து உஷாராகிவிட்டார் ராமகிருஷ்ணன். ' யாரோ ஆகாத ஆட்கள் கல்லெடுத்து வீசுகிறார்கள் ' என்ற அவசர முடிவுக்கு வந்தார். வெளியிலிருந்தவன் வீசியது, முகத்துக்கு நேரே வந்தது..... குனியக்கூட அவகாசமில்லை.... அவர் கல் என்று நினைத்த அந்தப் பொருளைக் கையால் தடுத்துப் பிடித்தார். ஆனால், அது வெடிகுண்டு...!
ராமகிருஷ்ணன் கையில் பிடித்ததுமே, அது பயங்கர சத்தத்தோடு வெடித்துச் சிதறியது. கைவிரல்கள் துண்டு துண்டாகி அந்த அறையில் மூலைக்கு ஒன்றாய் போய் விழுந்தன. வெடிச் சிதறலில் தெறித்துக் கிளம்பிய இரும்புத் துகள்கள் உடலைத் துளைத்து ரத்தப் பெருக்கைக் கிளப்பின.
வலியில் துடிதுடித்து ' ஓ'வென்ற மரண ஓலத்தோடு தரையில் விழுந்தார் ராமகிருஷ்ணன்.
ஐந்தே நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட, வாசலில் நின்றிருந்த ஜீப் மீது, எஞ்சியிருந்த இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டு அதை சிதைத்துவிட்டு நிதானமாய் நடந்து போய் தங்கள் வண்டிகளை ஆக்கிரமித்து நகர்ந்தார்கள் அவர்கள்.
ராமகிருஷ்ணன் உயிரைக் கையில் பிடித்தவாறு போராடிக் கொண்டிருந்தார். உடல் முழுக்க ஊசிக்கண் துளைத்த மாதிரி ரத்தம் வெளியேற, தலைசுற்றி நினைவு தப்புகிற மாதிரி இருந்தாலும், தட்டுத் தடுமாறி கதவைத் திறந்து வெளியில் வந்து ரோட்டில் நின்று கதறினார்.
நிசப்தமான இரவில் இந்தக் கூச்சல் கேட்டு பல வீடுகளின் கதவுகள் திறந்தன. ' தபதப வென ஓடிவந்தவர்கள், ராமகிருஷ்ணனை சூழ்ந்தார்கள். திராணியில்லாமல் ரோட்டில் சரிந்த அவர் தொண்டையைச் செருமி, தொலைந்து போன குரலை வரவழைத்து, " இளவரசன் அவன் தம்பி செல்வம், கீழ்குவாகம் ராமசாமி இன்னும் நாலுபேர் வந்து குண்டு போட்டானுங்க... ' ' என்றவாறே நினைவிழந்து போனார். பதறிய சிலர் ராமகிருஷ்ணனின் முகத்தில் தண்ணீர் தெளித்து, வாயில் தண்ணீர் புகட்ட முயன்றார்கள். ஆனால், அதற்குள் அவர் கண்கள் நிலைகுத்தி விட்டிருந்தன.
ராமகிருஷ்ணன் கொலை, தமிழ்நாடு விடுதலைப் படையினரை அதுவரை சந்திக்காக படையினரை அதுவரை சந்திக்காத நெருக்கடியில் கொண்டுபோய் மாட்டிவிட்டது. அதுவரை பெரம்பலூர் மாவட்ட போலீஸார் அவர்களின் வன்முறை வெறி யாட்டத்தைக் கண்டும் காணாமல் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கொலைக்குப் பிறகு கடலூர் மாவட்ட போலீஸுக்கு இவர்களைப் பிடிப்பது கௌரவப் பிரச்னையாகிவிட்டது. தனி போலீஸ் படை அமைத்து, வேட்டைக்கு வலை விரித்தது கடலூர் போலீஸ். கொஞ்ச நாட்களிலேயே கொலைச் சதியில் தொடர்புடையவர்கள் என்று நான்கு தீவிரவாதிகளைக் கைதும் செய்தது.
ராமசாமி, இளவரசன் என்று எல்லாருமே பழையபடி பதுங்கிவாழ வேண்டிய நிலை. முந்திரித் தோப்புகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.
பகல் - இரவு என்று வித்தியாசம் பார்க்காமல் முந்திரிக் காடுகளூடே கிழித்துக்கொண்டு வந்து தேடியது போலீஸ். செம்மண் புழுதி பறக்கவிட்டு, வேக ஓட்டமாய் வரும் போலீஸ் ஜீப்கள் அந்த காட்டினூடே இருக்கும் கிராமங்களை மிரட்சியோடு நிமிர்ந்து பார்க்க வைத்தன.
வன்முறைத் தோழர்களுக்கு பழையபடி தனிமைப் பயணம்தான். கேரியர் இல்லாத ஓட்டை சைக்கிள்களை மிதித்தபடிதான் தினசரி இடம்மாறி அடைக்கலம் தேடி ஒளிந்தனர். ஒரு அழுக்கு வேட்டியைக் கட்டிக்கொண்டு, சட்டை போடாமல், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, அடையாளம் தெரியாத ஆசாமிகளாய் உருமாறினர். அடாவடி கட்டைப் பஞ்சாயத்துகளும் அப்படியே நின்றுபோயின.
கணக்கு வழக்குப் பார்க்காமல் செலவழித்தவர்களுக்குக் கைவறண்டதும் வறுமை உறைத்தது. அப்போதுதான் இளவரசனுக்குப் புதையல் ஞாபகம் வந்தது.
வயலூர் வங்கியில் ஏற்கெனவே கொள்ளையிட்ட நகைகளை போலீஸ் கெடுபிடி நீங்கிய பிறகு நிதானமாய் உருக்கி விற்கலாம் என்ற நினைப்பில் எங்காவது பத்திரமாய் புதைத்துப் பாதுகாப்பில் வைத்திருக்கும்படி செட்டிக்குழிப்பள்ளம் ஆறுமுகத்திடமும் ராமசாமியிடமும் பொறுப்பை ஒப்படைத்தது கமிட்டி!
அதன் பிறகு தொடர்ந்து இயக்க நடவடிக்கைகள், பஞ்சாயத்துகள், போராட்ட ஏற்பாடுகள், தேர்தல் புறக்கணிப்பு பிரசாரங்கள் என்று திரும்பிப் பார்க்கவே நேரம் இல்லாமல் போயிற்று!
இடைப்பட்டக் காலத்தில் அரியலூரிலிருந்து ஜெயங்கொண்டம் வரும்போது பைக் ஆக்ஸிடெண்ட்டில் ஆறுமுகம் செத்து விட்டார். ராமசாமியிடம் போய்க் கேட்டால்தான் அது எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும் என்கிற நிலைமை. உருக்கி ஒன்றுக்குப் பாதியாய் விற்றால் கூட ஐந்து லட்சமாவது தேறுமே... துப்பாக்கி வாங்கத்தான் கொள்ளை அடித்தது. ஆனால், தினசரி வாழ்க்கையை ஓட்டுவதே பெரும்பாடாய் இருக்கும் போது துப்பாக்கி என்ன துப்பாக்கி? பழையபடி நிலைமை சகஜமாகி விட்டால் ஒன்றுக்கு ஐந்து வங்கிகளைக் கொள்ளை அடித்தாவது துப்பாக்கி வாங்கலாம்.
இப்படி நினைப்பு ஓடியதுமே ராமசாமியைப் பார்க்க புறப்பட்டார் இளவரசன். ராமசாமிக்கும் அப்போது நிலைமை இதே போலத்தான். நெருங்கிய ஆதரவாளர் ஒருவருக்குத் தகவல் சொல்லி, நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டுக்கு மட்டும் ஏற்பாடு செய்துகொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமான முந்திரித் தோப்பு ஒன்றில் பதுங்கியிருந்தார் அவர்.
நாள் முழுக்க எங்கெங்கோ தேடி அலைந்து விட்டுக் கடைசியில் ராமசாமி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்தார் இளவசரன். போலீஸ் வேட்டையால் தப்பியோடி தலைமறைவாய் வாழும் அவஸ்தைகளை அந்தச் சூழலிலும் சிரித்து ரசித்தபடி தன் பேச்சை ஆரம்பித்தார் இளவரசன்.
" நெருக்கடியான சூழல் இருக்கற தால கமிட்டியைக் கூட்ட முடியலை. அதேசமயம் கையில் பணமில்லாம நம்மால நடமாட முடியலை. நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமில்லை... நம்மோட வந்த பலருக்கும் நிலைமை இதுதான்! எல்லா பிரச்னையும் தீரணும்னா ஒரே வழிதான் இருக்கு.. ஏற்கெனவே வயலூர்ல எடுத்த நகைகள் உங்க பாதுகாப்பில் இருக்குது. அதை எடுத்து யார் மூலமாவது கொடுத்தனுப்பி வித்துடுவோம். வர்ற பணத்தை எல்லோரும் பிரிச்சிக்கலாம். கமிட்டியை அப்புறமா கூட்டி சமாதானம் சொல்லிக்கலாம். "
இளவரசன் சொல்லி முடித்ததும், ராமசாமி முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அதைத் தன் குரலிலும் காட்டினார். " என்ன தோழர் இப்படி சொல்றீங்க? ஆறுமுகம் கிட்டேதானே அதைக் கொடுத்திருந்தோம். அவன்தான் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டான். எப்படியும் உங்களுக்காவது அது இருக்கிற இடம் தெரியும்னு நினைச்சேன். அப்புறமா கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன். உங்களுக்கும் தெரியாம, எனக்கும் தெரியாம அப்படி எங்கேதான் புதைச்சிருப்பான் அவன்? "
ராமசாமியின் இந்தப் பதில் இளவசரனைக் கோபப்படுத்தியது. குரலில் உஷ்ணம் இருந்தது. " பண விஷயத்துல விளையாடாதீங்க தோழர்! அதைப் பாதுகாக்கற பொறுப்பை ஆறுமுகம் கிட்டேயும், உங்ககிட்டேயும்தான் இயக்கம் கொடுத்தது. ஆறுமுகம் இப்போ இல்லை. இதை சாதகமா பயன்படுத்தி, தனியா அதை அபகரிக்கலாம்னு நினைக்காதீங்க. அப்புறம் கமிட்டி சும்மா இருக்காது. நானும் சும்மா விடமாட்டேன். "
" புரியாம பேசாதீங்க. அந்த நகைகள் விஷயத்துல நான் அக்கறை காட்டினதில்லை. ஆறுமுகம் போக்கிலேயே விட்டுட்டேன். கமிட்டியிலே நீங்க முக்கிய பொறுப்புல இருக்கறதால, அவன் உங்ககிட்டே சொல்லியிருப்பான்னு நினைச்சேன். எனக்கு எதுவுமே தெரியாது. எங்கே வேண்டுமானாலும் சொல்றேன். அதைத் தனியா அனுபவிக்கணும்னு எனக்குப் பேராசை கிடையாது " ராமசாமியின் இந்த பதில் இளவரசனின் கோபத்தை இன்னும் கிளறியது.
" இதோ பார் ராமசாமி! ஆறுமுகத்தை இயக்கத்துக்கு கொண்டு வந்தவன் நீ. உனக்குதான் அவன் விசுவாசமா இருந்தான். சாகறவரைக்கும் உன் கூடத்தான் இருந்தான். உன்கிட்டே சொல்லாத ரகசியம்னு எதையும் அவன் மனசிலே வெச்சுக்கிட்டதில்லை. இது எனக்கும் தெரியும். கட்சியில எல்லோருக்கும் தெரியும். ஏதோ இன்னிக்கு அவன் உயிரோட இல்லைங்கறதுக்காக நாக்கைப் புரட்டிப் பேசாதே... மரியாதையா நகைங்க எங்கேயிருக்குன்னு சொல்லிடு. இல்லைன்னா, அதுக்காள அனுபவிப்பே. துரோகிங்களுக்கும், ஏமாற்றுக்காரங் களுக்கும் இயக்கம் மரண தண்டனைதான் விதிக்கும்..... உனக்கே இது தெரியும்! "
இளவசரன் பெருங்குரலெடுத்து ஆக்ரோஷமாய் கத்த, இம்முறை ராமசாமிக்கும் கடும் கோபம் வந்துவிட்டது.
" என்னடா? மரியாதையில்லாம பேசிக்கிட்டே போற.... நான்தான் திரும்பத் திரும்ப எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். என்னவோ மிரட்டற... நீதான் ஒட்டுமொத்த இயக்கமா? நீ ஒருத்தன்தான் கமிட்டியா? நானும்தான்டா அதுல அங்கம். நானும் உன்னை மாதிரி அரிவாளையும், வெடிகுண்டையும் கையில தூக்கி வளர்ந்தவன்தான். கொள்கையோட இருக்கறவனுக்குத் திருட்டுப்பட்டம் கட்டாதே. எனக்கும் மரண தண்டனை கொடுக்கத் தெரியும். எவனோ ரோட்டுல போற தொடை நடுங்கிப் பயகிட்டே பேசற மாதிரி என் கிட்டே வசனம் பேசிக்கிட்டு நிக்காதே... ' கொள்ளையடித்த நகைக்கு உரிமை கொண்டாடும் சண்டையில் கொள்கையைக் கேடயமாக்கிக் கொள்ளப் பார்த்தார்.
ராமசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே இளவரசன் கோபமாய் தன் சைக்கிளை ஸ்டாண்ட் தள்ளிவிட்டு பலனை எடுத்து மேலேறி உடகார்ந்தார். சில நொடிகள் ராமசாமி யின் முகத்தையே பார்த்தார். " யாருக்கு யார் தேதி குறிக்கறாங்க.. யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம் ராமசாமி! நீ எமனோட விளையாட ஆரம்பிச்சுட்டே... ' ' என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாய் சைக்கிளை மிதித்தார் இளவரசன். நகை கிடைக்காத வெறி, அவர் முகத்தில் தாண்டவமாடியது.
அடுத்து வந்த நாட்கள்.. வாரங்கள்... மாதங்கள்... இந்த இருவருக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே போனது. தமிழ்நாடு விடுதலைப்படையின் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி, ராமசாமியை அமைப்பிலிருந்து நீக்கச் செய்தார் இளவரசன். ராமசாமி உடனே ' தமிழ் தேச மக்கள் விடுதலை இயக்கம் ' என்ற பெயரில் புதிய அமைப்பை ஆரம்பித்தார். ஆட்கள் அணி பிரிந்தனர். இரு தரப்புமே புதிது புதிதாய் தங்கள் பக்கம் ஆள் சேர்க்கும் முயற்சிகளில் இறங்கினர். ராமசாமி கோஷ்டி, இளவரசன் கோஷ்டி என்று பெரிய பிரிவினையே ஆனது.
இந்தப் பிரிவினையில் மனம் வெதும்பிய சீனியர் தோழர்கள் சிலர் சமாதான வேலையில் இறங்கினர். ஆனால் பேராசையோடு, கொலைவெறியோடு வலம் வந்தவர்கள் இந்த சமாதான முயற்சியை வரவேற்கவில்லை. துரத்தித் துரத்தி வேட்டையாடிய போலீஸும் சற்றே களைப்பாறி, இவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்தது!
புதிதாய் ஆள் சேர்த்தாயிற்று... அணிகளின் பலம் கூடிற்று... ஆனால், செலவழிக்கப் பணம்? வேறு வழியின்றி இரண்டு தரப்புமே வழிப்பறியிலும், கொள்ளையிலும் இறங்கினர்.
ஜெயங்கொண்டத்தையும் அரியலூரையும் ஒட்டிய சாலைகளில் இரவு நேரத்தில் தனியாய் டூ வீலர்களில் வருபவர்களை மிரட்டிப் பணம் பறித்துக்கொண்டு.... சமயங்களில் வாகனங்களையும் பிடுங்கிக்கொண்டு ஓடினர். வசதி படைத்தவர்களின் வீடுகளில் வயதானவர்யாராவது தனியாக இருக்கும்போது உள்ளே புகுந்து நகை, பணம் என்று களவாடிவிட்டு வந்தனர். இதில் கூட ராமசாமி கோஷ்டியில் இருப்பவர்கள் போய் கொள்ளையை முடித்துவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம், " இளவரசன் தெரியுமா? அவரோட ஆளுங்கதான் நாங்க! " என்று சொல்லிவிட்டு வருவதும், இதேபோல் இளவரசனின் ஆட்கள் ராமசாமிமீது பழியைப் போட்டு விட்டு வருவதும் வாடிக்கையாகிப் போயின. கொள்கை முழக்கத்தோடு துவங்கிய இயக்கம், கொள்ளைக் கூட்டமாக மாறியது இப்படித் தான்!
மேலும் சலசலக்கும்....