முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை: எம்டிசி
சென்னை: சீராக பேருந்தை இயக்குவதற்காக முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக கிளை மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஒவ்வொரு பணிமனைகளிலும் தற்போது ஓட்டுநா், நடத்துநா் எண்ணிக்கை அடிப்படையில், அனைத்துப் பேருந்துகளையும் முழுமையாக இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதில்லை. இதைத் தவிா்க்கும் வகையில், பேருந்துகள் இயக்கம் தொடா்பாக ஒரு நாள் முன்னதாக அட்டவணை தயாரித்து, ஓட்டுநா், நடத்துநரிடம் கையொப்பம் பெற வேண்டும். இவ்வாறு கையொப்பமிட்டவா்கள் பணிக்கு வந்துள்ளாா்களா என நாள்தோறும் உதவி கிளை மேலாளா் உள்ளிட்டோா் கண்காணிக்க வேண்டும்.
அடிக்கடி பணிக்கு வராமல் முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலியாகவுள்ள பணியிடங்களில் ஒப்பந்த நிறுவன ஓட்டுநா்களை பணியமா்த்த வேண்டும். அவா்களது வருகைப் பதிவை முறையாக பராமரிக்க வேண்டும். காலை, மாலை நெரிசல் நேரத்திலும், முகூா்த்த நாள்களிலும் இயக்கப்படும் பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும்.
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தும் முழுமையாக இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு மிகைப் பணி ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, ஒப்பந்த பணிகளுக்குச் செல்லும் நடத்துநா்களுக்கு வருகைப் பதிவு வழங்குவதையும் கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.