90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
மும்பை அணு ஆராய்ச்சி மையம்: 14 வரைபடங்கள், அணு ஆயுத தகவலுடன் சிக்கிய மர்ம நபர் யார்? - பகீர் பின்னணி
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் கடந்த வாரம் விஞ்ஞானி என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் அக்பர் குத்புதின் உசைனி என்று தெரியவந்தது.
விசாரணையில் அவர் விஞ்ஞானி அல்ல என்பது உறுதியானது. அவரிடம் அணு ஆயுதம் தொடர்பான தகவல்கள் மற்றும் 14 வரைபடங்கள் இருந்தன. அவற்றை போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பல போலி பாஸ்போர்ட்கள், ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி என்பதற்கான போலி அடையாள அட்டையும் வைத்திருந்தார். அதில் அவரது பெயர் அலி ராசா உசைனி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தவிர, அலெக்சாண்டர் பார்மர் என்ற பெயரிலும் அவரிடம் அடையாள அட்டை இருந்தது.
அவரை விசாரித்ததில், கடந்த சில மாதங்களில் பல வெளிநாடுகளுக்கு தொலைபேசி மூலம் அழைப்புகள் மேற்கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்றும், அந்த அமைப்புகள் அணு ஆயுதம் தொடர்பான கட்டுரைகள் வழங்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

மேலும், உசைனி அடிக்கடி தனது அடையாளத்தையும் பெயரையும் மாற்றிக்கொண்டு வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட உசைனி, அதன் பிறகும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபாய் மற்றும் தேஹ்ரான் போன்ற நகரங்களுக்கு சென்று வந்துள்ளார்.
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த உசைனி, கடந்த 1996-ம் ஆண்டிலேயே தனது வீட்டை விற்றுவிட்டார். ஆனால் அதன் பிறகும் அதே வீட்டு முகவரியைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், உசைனி தனது சகோதரர் அடில் உசைனி மூலமாக போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதற்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முனாசில் கான் என்பவரும் உதவி செய்துள்ளார்.
















