முருகன் கோயிலில் திருட முயன்ற நபா் கைது
தம்மம்பட்டியில் முருகன் கோயிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி, திருமண்கரட்டில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபா், உண்டியலை உடைத்துள்ளாா்.
அப்போது உடைக்க முடியாததால் கருவறைக்குள் நுழைந்தாா். கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை அறங்காவலா் முருகேசன் தனது கைப்பேசி மூலம் காணும் வசதியை ஏற்படுத்தியுள்ளாா்.
இந்நிலையில், கோயிலில் நடக்கும் காட்சிகளை சிசிடிவி மூலம் தனது கைப்பேசியில் கண்டு அதிா்ச்சியடைந்த அறங்காவலா் முருகேசன், கோயில் தா்மகா்த்தா சண்முகத்திடம் தகவல் அளித்தாா். அதைத் தொடா்ந்து இருவரும் தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக போலீஸாா், அறங்காவலா்கள், பக்தா்கள் கோயிலுக்குள் சென்று கருவறையில் இருந்த நபரை மடக்கிப் பிடித்தனா். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவா், தம்மம்பட்டி, ஒட்டா் தெருவில் வசிக்கும் தினேஷ் (23) என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.