திருநெல்வேலியில் `அவள் கிச்சன்’ சீசன் 2 - ஆர்வமாக கலந்துகொண்ட பெண்கள்; அசத்தலாக ...
முருங்கையில் பிஸ்கட், தேநீர்... முருங்கை விவசாயத்தில் ரூ.1.75 கோடிக்கு வியாபாரம் செய்யும் உ.பி. பெண்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் காமினி சிங் என்ற பெண் விவசாயி முருங்கை விவசாயத்தில் சாதித்து வருகிறார். லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் காமினி சிங் வேளாண்மைத் துறையில் முதுகலைப்பட்டம் படித்து முனைவர் பட்டமும் பெற்றவர். அவர் மத்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் 7 ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அப்போது ஆய்வுக்கூடத்தில் மட்டும் முடங்கிக்கிடப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. விவசாயிகளுடன் சேர்ந்து கள நிலவரத்தை நேரில் தெரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும் என்று நினைத்தார். அதோடு விவசாயிகள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண விரும்பினார். இதற்காகக் காமினி துணிந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
2015 ஆம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்த பிறகு சிறு விவசாய தொழில் முகவர்களை உருவாக்க வேண்டும் என்று காமினி நினைத்தார்.
இது குறித்து காமினி கூறுகையில், ''விவசாயிகள் ஆரம்பத்தில் குறைந்த மகசூல் கிடைக்கும் என்று கருதி இயற்கை விவசாயத்தில் ஈடுபட மறுத்தனர். மிகவும் போராடி 10 விவசாயிகளுடன் வேலையை ஆரம்பித்தேன். முருங்கைக்காய் மிகவும் குறைவான பராமரிப்பைக் கொண்டது என்பதால் நிலத்தின் ஓரங்களில் முருங்கையைப் பயிரிடும்படி விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டேன். குறைவான தண்ணீர், குறைவான உரம் மற்றும் குறைவான பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விவசாயம் செய்யமுடியும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தேன். ஒவ்வொரு விவசாயியிடமும் தலா 100 முருங்கை மரங்களை நடவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதில் 1500 கிலோ முருங்கைக்காய் கிடைத்தது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 37500 ரூபாய் கிடைத்தது.
இதில் விவசாயிகள் வெற்றி பெற ஆரம்பித்தவுடன் மற்ற விவசாயிகளும் இதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். அதிகமான விவசாயிகள் முருங்கையை, பயிர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த விவசாயமாகச் செய்ய ஆரம்பித்தனர். இதன் மூலம் முருங்கை விவசாயத்தில் புதிய புரட்சி ஏற்பட்டது. 2019ம் ஆண்டு டாக்டர் முருங்கா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.
9 லட்சம் ரூபாய் செலவில் முருங்கையை பொடியாக்கும் இயந்திரம், முருங்கையை அதிக நாட்கள் வைத்திருக்கும் இயந்திரங்களை வாங்கினேன். இதில் எனக்கு நல்ல லாபம் கிடைத்தது. உடனே முருங்கையை மையமாக வைத்து உணவுப் பொருட்கள், சுகாதார பொருட்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன். முருங்கை தேநீர், பிஸ்கெட், மாத்திரை, ஆயில், சோப்பு போன்றவற்றை உருவாக்கினோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நிறுவனமும் வேகமாக வளர ஆரம்பித்தது.
2020ம் ஆண்டு மத்திய அரசு தங்களது நிறுவனத்திற்கு 25 லட்சம் மானியம் வழங்கியது. அதன் மூலம் நவீன இயந்திரங்கள், ஆயில் எடுக்கும் இயந்திரம், மாத்திரை தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கினோம். அந்த இயந்திரங்கள் மூலம் வலி நிவாரண ஆயில், சுகாதாரப் பொருட்கள், முடி வளர ஆயில் உட்பட முருங்கையிலிருந்து 22 வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இப்போது எங்களுடன் சேர்ந்து 100 விவசாயிகள் பாரம்பரிய முறையைப் பின்பற்றி விவசாயம் செய்து லாபம் ஈட்டுகின்றனர்.
மஞ்சள், மாம்பழம் போன்றவற்றில் ஊடுபயிராக முருங்கையைப் பயிரிடும்படி கேட்டுக்கொண்டோம். அதோடு செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதையும் குறைக்கத் தேவையான உதவிகளைச் செய்தோம். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.75 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதனை 2.5 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதோடு கூடுதல் விவசாயிகளை எங்களுடன் சேர்க்கவும், கூடுதல் பொருட்களை உருவாக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs