`முறையாக வரி செலுத்தியவர்களுக்கு வருமானம் வராத காலத்தில், அரசு உதவ வேண்டும்!' - விஜய் சேதுபதி
``நமது உரிமைக்காக அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறமோ, அதே அளவு வருமான வரி செலுத்துவது நம் கடமை" என்று பேசினார் பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி.
மதுரை வருமான வரித்துறை சார்பில் வருமான வரித்துறை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில், TAX PAYERS HUB நிகழ்ச்சி வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமுக்கம் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவை நடிகர் விஜய் சேதுபதி இன்று தொடங்கி வைத்தார்.
பின்பு பேசியவர், ``நானும் சில ஆடிட்டர்களின் அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறேன், வருமான வரி செலுத்துபவர்கள் அது தொடர்பான சேவைகள் தொடர்பாக வருமான வரி அலுவலத்தில் யாரை பார்க்க வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது தெரியாத நிலை இருந்தது. இப்போது எளிமையாக குழந்தைகள்கூட தெரிந்துகொள்ளும் வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் இணையதளம் தொடங்கியுள்ளது வரவேற்பு அளிக்கக் கூடியது. அதிலும் கார்டூன் வடிவில் சுவாரஸ்யமாக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. ஏனென்றால் இது போன்ற சிரமங்களை நானும் அனுபவித்துள்ளேன்.
மேலும் பான் கார்டு அப்ளை செய்ய வேண்டுமென்றால் அது குறித்த தகவல்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் உள்ளது. இது பல பேருக்கு கடினமாக இருக்கும். தமிழிலும் இருந்தால் அதை பார்த்து புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். நீங்கள் இந்த இணையதளத்தை தொடங்குவதே எல்லோருக்கும் எளிமையாக செல்ல வேண்டும என்ற முயற்சிதான். பிரச்னை வருவதற்கு முன் அதுபற்றி முன்னதாகவே செய்துவிடவேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.
நமக்கு புரியும் மொழியில் இருந்தால் தான் தெளிவாக இருக்கமுடியும். இல்லையென்றால் மீண்டும் ஒருவரை சார்ந்து இருக்கக்கூடிய நிலை உருவாகும். வருமான வரி செலுத்துவது நமது கடமை. நமது உரிமைக்காக அரசிடம் எந்தளவுக்கு கோரிக்கை வைக்கிறமோ அதே அளவு வரி செலுத்துவதும் கடமை.
ரொம்ப நாளாக மனதில் உள்ள விஷயத்தை இப்போது சொல்கிறேன், ஒருகாலத்தில் கஷ்டபட்டு சம்பாதித்து வரி கட்டுகிறோம். இன்னொரு காலத்தில் வருமானம் இல்லாமல் போகலாம். அப்போது வரி முறையாக செலுத்துபவர்களை கைவிடாத வகையில் வருமான வரித்துறையினர் வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.