`முல்லைப்பெரியாறு அணை உரிமைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!' - தமிழக விவசாயிகள் முடிவு
முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்திருப்பதாகவும் அதனால் நீர்மட்டத்தை 120 அடிக்கும் குறைவாக்க வேண்டும் எனக் கோரி கேரளாவைச் சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி கேரளாவைச் சேர்ந்த பலரும் அணைக்கு எதிராக வழக்கு போட்டுள்ளனர்.
குறிப்பாக மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கவும் கோரினர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை பாதுகாப்பு சட்டத்தின்படி அணை பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை கொண்டு தேசிய குழு அமைக்க வேண்டும். இதுவரை மத்திய அரசால் ஏன் அந்தக் குழு அமைக்கப்படவில்லை என பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தேனியில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ``அணைக்கு எதிராக தொடர்ச்சியாக பொய் பரப்புரையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நிபுணர் குழுக்களால் முல்லைப்பெரியாறு அணை வலுவாக இருப்பதாக நிரூபித்தபிறகும் கூட கேரள அரசியல்வாதிகளும், தனியார் அமைப்பினரும் அணையை இடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் பேபி அணையை பலப்படுத்த விடாமல் தொடர்ச்சியாக கேரள அரசு இடையூறு செய்து வருகிறது.
அணைக்கு செல்லும் வள்ளக்கடவு சோதனைச் சாவடி கேரளாவுக்கு சொந்தமானது அல்ல. முல்லைப்பெரியாறு அணையில் முகாமிட்டுளள கேரள நீர்வளத்துறையினர் வெளியேற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும், ``அணையில் தமிழன்னை படகு மீண்டும் இயக்கப்பட வேண்டும். தமிழக அதிகாரிகள் அணைக்கு சென்றுவர எவ்வித இடையூறும் கொடுக்கக் கூடாது. தமிழகத்திடம் இருந்த அணை பாதுகாப்பு உரிமையை கேரள அரசிடம் இருந்து தமிழகம் மீண்டும் பெற வேண்டும். ஆனால் தமிழக அரசை நம்பி பயனில்லை. எனவே அணைக்கான உரிமைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.