முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருபவா் ரஸியா பேகம். இவா் இதற்குமுன் தூனேரி, நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளாா். இவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 லட்சத்துக்கு மேல் சொத்து சோ்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, உதகை அரசு பாலிடெக்னிக் எதிரே உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மேலும், தஞ்சாவூா் அம்மாபேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினா் தெரிவித்தனா்.