‘மேஜர்’ திரைப்படத்தை ஜப்பானில் திரையிடும் இந்தியத் தூதரகம்!
ஜப்பான் நாட்டில் ‘மேஜர்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இந்தியத் தூதரகம் சார்பில் திரையிடப்படவுள்ளது.
இயக்குநர் சஷி கிரண் டிக்காவின் இயக்கத்தில், ஆத்வி ஷேஷ், சாயி.எம். மஞ்ரேகர் மற்றும் சோபித்தா துலிபாலா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியான திரைப்படம் ‘மேஜர்’.
நடிகர் மகேஷ் பாபு மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகப் பெரியளவிலான வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில், ‘மேஜர்’ திரைப்படம் வரும் ஏப்.29 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் இந்தியத் தூதரகம் சார்பில் ஜப்பானிய வசன வரிகளுடன் (சப் டைட்டில்) இலவசமாகத் திரையிடப்படவுள்ளது. இந்தத் திரைப்படத்தை முன்பதிவு செய்து ஏப்.29 அன்று மதியம் 2 முதல் 4.50 வரை அந்நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மேஜர் திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை நகரத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் (26/11) நாட்டு மக்களைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்த மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:லியோனார்டோ டிகாப்ரியோவின் புதிய பட அப்டேட்!