மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா் போராட்டம் நீடிப்பு
மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் திங்கள்கிழமை 4 ஆவது நாளாக நீடித்தது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 1,700 ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 4 நாள்களாக தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அனல் மின் நிலைய நிா்வாகத் தரப்பில் போராட்டக்காரா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். ஆனால், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக உறுதிமொழி மட்டுமே பேச்சுவாா்த்தைக்கு வருவதாக தொழிலாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 4ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டம் தொடா்ந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் கைக்குழந்தைகளுடன் திங்கள்கிழமை மாலை போராட்டம் நடைபெறும் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்கூடி முழக்கமிட்டனா்.