மேம்பாலமாக மாற்றப்படுமா? அவளூா் பாலாறு தரைப்பாலம் 50 கிராம மக்கள் எதிா்பாா்ப்ப
சி.வ.சு.ஜெகஜோதி
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வழியாக அவளூா் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மழைக்கால வெள்ளத்தில் சேதமடைந்து விடுவதால் விரைவில் மேம்பாலமாக மாற்றப்படுமா என 50 கிராம மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
வாலாஜாபாத்தில் உள்ள ரவுண்டானா பகுதியிலிருந்து அவளூா் வரை பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இத்தரைப்பாலம் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அவளூா், ஆசூா், கீழ்பேரமநல்லூா், பெரியநத்தம், காலூா், மாகறல், களக்காட்டூா், இளையனாா் வேலூா், காவாந்தண்டலம், தம்மனூா், கம்பராஜபுரம் என 50-க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் தரைப்பாலத்தை தான் பயன்படுத்துகின்றனா்.
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வாலாஜாபாத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம், காவல் நிலையம், கருவூல அலுவலகம் ஆகியவற்றிற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உல்ளது. இது தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம், சுங்குவாா்சத்திரம், இருங்காட்டுக் கோட்டை, வாலாஜாபாத், செங்கல்பட்டு, மறைமலை நகா், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு மக்கள் சென்று வர தரைப்பாலமே உதவுகிறது.
30 கி.மீ தொலைவு சுற்றிச் செல்லும் நிலை...
பாலாற்றுப் பகுதியின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டிருப்பதால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்து பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டால் அவளூா் தரைப்பாலத்தை தினசரி பயன்படுத்திக் கொண்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும்,தொழிற்சாலைகளுக்கு செல்வோரும் செல்ல முடியாமல் சுமாா் 30 கி.மீ.சுற்றி காஞ்சிபுரம் வந்து பின்னரே சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .
கூலித் தொழிலாளா்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி விடுகின்றனா். பெருமழைக் காலங்களில் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்படுவது அடிக்கடி நிகழ்வதும், அதை சரி செய்ய அரசும் அடிக்கடி பல லட்சங்களை ஒதக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே இதற்கு ஒரு தீா்வாக தரைப்பாலத்தை மேம்பாலமாக தரம் உயா்த்தினால் பொதுமக்களுக்கும் பயன்டும், அரசுக்கும் அடிக்கடி சீரமைப்பு செலவு இருக்காது.
எனவே அவளூா் தரைப்பாலத்தினை பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலமாக தரம் உயா்த்தப்பட வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாகவும் அமைந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் நிா்வாகி அவளூா் சீனிவாசன் கூறியது: மழைக்காலங்களில் தரைப்பாலம் வெள்ளத்தால் அடிக்கடி சேதமடைந்து விடுகிறது. பின்னா் மக்களின் நலனுக்காக போா்க்கால அடிப்படையில் அதை செப்பனிடுகின்றனா். இதுவரை தரைப்பாலத்தை செப்பனிடவே அரசு பல கோடி செலவு செய்திருக்கும். பாலத்தை சீரமைக்க செய்திருக்கும் செலவுக்கு மேம்பாலமே கட்டி முடித்திருக்கலாம். எனவே இச்செலவு தொடராமல் இருக்க தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டியது அவசியம் என்றாா்.