மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு
பஹராம்பூா்: மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.
இதுதொடா்பாக அந்த மாவட்ட மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது:
வக்ஃப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜங்கிபூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோா் திரண்டனா். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசினா். மேலும் காவல் துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனா்.
இதையடுத்து சூழலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.
கல்வீச்சில் காவல் துறையைச் சோ்ந்த சிலா் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
தற்போது அந்தப் பகுதியில் சூழல் முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்று மாநில காவல் துறை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.