மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே ரெங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் 1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிர்நீத்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தியாகி ராஜேந்திரன் சமாதி அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அப்பொழுது மத்திய அரசு கொண்டு வந்த ஹிந்தி திணிப்பு சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்த ராஜேந்திரன் உடல் சொந்த ஊர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ராஜேந்திரனின் சமாதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை அன்று மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் சமாதி அமைந்துள்ள இடத்தை சுற்றி தனியார் வசம் இருந்த 4 சென்ட் நிலத்தை தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக சீமான் தனது பெயரில் வாங்கி பத்திரப்பதிவு செய்தார்.
இதற்காக பரங்கிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் சென்ற சீமான் அலுவலகத்தில் காத்திருந்து அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டு இடத்தைப் பதிவு செய்துவிட்டு சென்றார்.
தியாகி ராஜேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அதனை சுற்றியுள்ள இடத்தை சொந்தமாக வாங்கியிருக்கும் சீமான் மணி மண்டபம் அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!