மொழி, கலை இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் வாழ்க்கை சரிதம் எனும் தலைப்பிலான நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மேலும் முத்தமிழ்ப் பேரவை சாா்பில் கருணாநிதி விருது நடிகா் சத்யராஜூக்கும், ராஜரத்னா விருது திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரத்துக்கும், இயல் செல்வம் விருது ஆண்டாள் பிரியதா்ஷினிக்கும், இசை செல்வம் விருது காயத்ரி கிரீஷுக்கும், நாதஸ்வரச் செல்வம் விருது திருக்கடையூா் டி.எஸ்.எம். உமாசங்கருக்கும், தவில் செல்வம் விருது சுவாமிமலை சி.குருநாதனுக்கும், கிராமியக் கலைச் செல்வம் விருது தி.சோமசுந்தரத்துக்கும், நாட்டியச் செல்வம் விருது பாா்வதி ரவி கண்டசாலாவுக்கும் முதல்வா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முத்தமிழறிஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ்ப் பேரவையின் சார்பில், இந்தப் பேரவையின் பொன்விழா - பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா - இசை விழா - நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா – இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் முத்தமிழ்ப் பேரவையின் செயலாளர் மதிப்பிற்குரிய இயக்குநர் அமிர்தம், பேரவையின் தலைவர் ராமானுஜம் அவர்களுக்கும், துணைத் தலைவர் குணாநிதி மற்றுமுள்ள நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முத்தமிழ்ப் பேரவை என்பது பெருமைக்குரிய, சிறப்புக்குரிய ஒன்றாக விளங்கக் காரணம், தலைவர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டதுதான். அந்தப் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் பேரவை நிகழ்ச்சிக்காக கருணாநிதி ஒதுக்குவாா். அப்படி நடைபெறும் நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு, தனது கைகளால் அந்த விருதுகளை வழங்குவாா். அதனை தனது கடமையாகக் கொண்டிருந்தாா். அவரது வழியில் நானும் அந்தக் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
முத்தமிழ்ப் பேரவையை கடந்த 50 ஆண்டு காலமாகக் கட்டிக் காத்து வரும் நம்முடைய இயக்குநர் அமிர்தம், நான் ஒவ்வொரு ஆண்டும் வர
வேண்டும் என்று அவரே முன்கூட்டியே இரண்டு மாதத்திற்கு முன்பு என்னிடம் தேதியைச் சொல்லி அவர் அழைப்பது உண்டு. அவருடைய அந்த அன்பான கட்டளையை நான் ஏற்றுக் கொண்டு இதில் நான் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்த அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து ஒரு பீடு நடை போட்டு, சிறப்போடு - எழுச்சியோடு - ஏற்றத்தோடு இந்த முத்தமிழ்ப் பேரவை நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், குறிப்பாகவும் - சிறப்பாகவும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதன் இயக்குநர் அமிர்தம் சாதனை என்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்த் திரை உலகில் எத்தனையோ சாதனைகளை அவர் ஆற்றி இருந்தாலும் முத்தமிழுக்கு ஆற்றி வரும் இந்த பங்களிப்பானது முத்தாய்ப்பாக இது அமைந்திருக்கிறது.
எழுத்தாளர் துமிலன் எழுதியிருக்கும் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் சுருக்கப்பட்ட வடிவத்தை, குணாநிதி தயாரித்து இங்கு வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
இசையுலகத்தில் முடிசூடா மன்னராக - ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் ராஜரத்தினம். அவரைப் பற்றிச் செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் சொன்னதை
இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்... நாதஸ்வர வித்வான்களில் திருவாவடுதுறை ராஜரத்தினம் ஒரு பெரிய மேதாவி. காதில் கடுக்கன் மின்ன, கிராப்புத் தலையோடு அவர் வாசிக்கும் அழகே தனி அழகு. அவருக்கு முன்பெல்லாம், நாதஸ்வரம் என்பது ஒன்றரை முழம்தான் இருக்கும். முதன்முதலில்
இதையும் படிக்க |திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி: எடப்பாடி கே.பழனிசாமி
ராஜரத்தினம் நாதஸ்வரத்தை நீளமாகச் செய்து வாசிக்க ஆரம்பித்த பெருமைக்கு உரியவர் என்று செம்மங்குடி சீனிவாசய்யர் பெருமையோடு சொல்லியிருக்கிறார். அத்தகைய ராஜரத்தினம் பெயரில் ராஜரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதன்முதலில் உத்தரவிட்டவர் கருணாநிதி.
ஆண்டுதோறும் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்கிறீர்கள். அவரால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ் பேரவையின் சார்பில் கருணாநிதி பெயரில் வரும் ஆண்டில் இருந்து ஒரு விருது வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நடந்த விழாவில் கட்டளை பிறப்பித்தேன். இந்த ஆண்டு அதனை பேரவையின் செயலா் அமிா்தம் நடைமுறைப்படுத்தியுள்ளாா்.அதற்காக முதலில் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆண்டு கருணாநிதி விருது நம்முடைய சத்யராஜுக்கு வழங்கப்படுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் மிக மிக தகுதி வாய்ந்தவருக்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசி நடித்தவர். தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். எனவே, அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கலையுலகத்தில் இருந்து கொண்டே தன்னுடைய பகுத்தறிவு உணர்வை - சுயமரியாதை எண்ணத்தை - திராவிடக் கொள்கைகளை மறைக்காமல் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாகப் பேசக்கூடியவர் நம்முடைய சத்யராஜ்.
சில நாட்களுக்கு முன்பு, இதே அரங்கத்தில் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அதில் சிறப்பான - துணிச்சலான கருத்துகளை எல்லாம் எடுத்துப் பேசி இருக்கிறார் நம்முடைய சத்யராஜ்.
விருது பெற்ற அனைத்து விருதாளா்களும் முத்தமிழுக்கு இலக்கணமாகத் திகழ்கிறாா்கள். விருது பெற்ற நீங்கள் அனைவரும், உங்களைப்போல பல
திறமைசாலிகளைக் கண்டறிந்து வளா்த்தெடுக்க வேண்டும். என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம்முடைய முழக்கம்! அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும், செழிக்க வேண்டும்! இடையில் சாதி, மதம் என்று அந்நிய மொழிகள் மூலமாகப் பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல் நடந்தாலும், அனைத்தையும் தாங்கி, தமிழும் - தமிழினமும் - தமிழ்நாடும் நின்று நிலைக்கத் தமிழின் வலிமையும், நம்முடைய பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம், தமிழின் வலிமையும் பண்பாட்டின் சிறப்பும்தான். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போல காக்க வேண்டும்! இதைதான் முத்தமிழ்ப் பேரவைக்கு என் பொன்விழாச் செய்தியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.