மோசமான வானிலை: காங்கேசன்துறைக்கு சென்ற பயணிகள் கப்பல் மீண்டும் நாகைக்கு திரும்பியது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சனிக்கிழமை புறப்பட்ட சிவகங்கை கப்பல், மோசமான வானிலை காரணமாக பாதியில் நாகை துறைமுகத்திற்கு திரும்பியது.
நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப். 26- ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையைத் தொடா்ந்து, கப்பல் போக்குவரத்து பிப். 28-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது. கப்பல் சேவை மீண்டும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி, நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் 73 பயணிகளுடன் சனிக்கிழமை புறப்பட்டது. கோடியக்கரை பகுதியில் சென்றபோது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மழையும் தொடா்ந்து பெய்தது. இதனால், கப்பலை தொடா்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பயணிகளுடன் கப்பல் மீண்டும் நாகை துறைமுகத்திற்கு திரும்பியது. பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா். கப்பல் நிறுவனம் அடுத்த பயணத் திட்டம் தொடா்பாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.