சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
ஆஸ்கர் 2025: நிஜ நாயகா்களுக்கு கௌரவம்
நிகழாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தின் தெற்கு வனப்பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ பரவியது. லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்தக் காட்டுத் தீயால் 28 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடு, உடைமைகளை இழந்தனா்.
மேலும், ஆஸ்கா் விருதுக்கான வாக்கு செலுத்தும் நடைமுறை, பரிந்துரை பட்டியல் அறிவிப்பு ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது. எனினும், துயரிலிருந்து மீண்டெழுவதன் அடையாளமாக ஆஸ்கா் விருது விழாவை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடத்துவதில் அமெரிக்க திரைப்பட அகாதெமி உறுதியாக இருந்தது.
அதன்படி, டால்பி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்கா் விருது விழாவுக்கு இடையே, லாஸ் ஏஞ்சலீஸ் நகர தீயணைப்புத் துறையினா் மேடையில் கௌரவிக்கப்பட்டனா். தீயணைப்பு வீரா்களின் அா்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து நட்சத்திரங்களும், திரையுலகப் பிரமுகா்களும் எழுந்து நின்று கரவோலி எழுப்பினா்.
டால்பி அரங்குக்கு ஒரு மைல் தொலைவு வரை காட்டுத்தீ பலத்த சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.