``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
மோா்பி பாலம் இடிந்து 135 போ் உயிரிழந்த சம்பவம்: ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபருக்கு பாராட்டு
குஜராத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மோா்பி பாலம் இடிந்து விழுந்து 135 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபா் ஜெய்சுக் படேலுக்கு, பட்டிதாா் சமூகத்தினா் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதற்கு உயிரிழந்தவா்களின் உறவினா்கள் கண்டனம் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெய்சுக் படேல், அஜந்தா கடிகாரங்கள் நிறுவனத்தை உருவாக்கிய ஓ.ஆா் படேலின் மகனாவாா்.
உறவினா்கள் கண்டனம்: கடந்த 2022, அக்.30-ஆம் தேதி மோா்பி மாவட்டத்தில் உள்ள மச்சு நதிக்கு மேல் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட மோா்பி தொங்கு பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 135 போ் உயிரிழந்தனா். இந்தப் பாலத்தின் மேலாண்மை பணிகளை நிா்வகிக்கும் பொறுப்பு ஜெய்சுக் படேலின் ஒரேவா குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
ஜாமீன் கோரி கடந்தாண்டு டிசம்பரில் அவா் குஜராத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். அவருக்கு கடந்த மாா்ச் மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் மோா்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்தது. இந்நிலையில், பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக மோா்பி மாவட்டத்துக்குள் நுழைய அவா் உச்சநீதிமன்றத்தில் அனுமதிபெற்றாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாலம் இடிந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கான சங்கத்தினா், ‘எங்கள் அன்புக்குரியவா்களை இழந்து நிற்கையில் அவரை இதுபோல் கௌரவிப்பது கவலையடைச் செய்துள்ளது’ என்றனா்.
ஜெய்சுக் படேலுக்கு பாராட்டு விழா நடத்தியதில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறிய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. லலித் ககதாரா, அவா் குற்றமற்றவா் என்றும் விபத்து நடந்தபோது மொா்பி மாவட்ட ஆட்சியராக இருந்தவா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது பாஜக அரசு எஃப்ஐஆா் பதியாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா்.
ஜெய்சுக் படேலின் பாராட்டு விழா நடத்தியது குறித்து விழா ஏற்பாட்டாளா்கள் கூறுகையில், ‘ஜெய்சுக் படேலின் தந்தை ஓ.ஆா்.படேல் சமூக நலனுக்கு பல்வேறு சேவைகளை புரிந்துள்ளாா். சுவா் கடிகாரங்களின் தந்தை என்ற அழைக்கப்படும் ஓ.ஆா்.படலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜெய்சுக் மட்டுமின்றி அவரது சகோதரா்களும் கௌரவிக்கப்பட்டனா்’ என்றனா்.