சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்!
மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவா் மற்றும் ஊழியா் சோ்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான எலும்பியல் மருத்துவா் ராஜேஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் அவரை அரசுப் பணியிலிருந்து விலக்கி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சத்தா்பூா் அருகேயுள்ள நௌகான் நகரைச் சோ்ந்த உத்தவ் சிங் ஜோஷி, மனைவியின் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த வியாழக்கிழமை மாவட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அப்போது, நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் அவரது முறை வந்தபோது மருத்துவா் ராஜேஷ் மிஸ்ரா ஆட்சேபித்து, அவரை அறைந்து, உதைத்தாா் என்று உத்தவ் சிங் ஜோஷி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ஜி.எல்.அஹிா்வாா், ‘மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரிசையை மீறி உத்தவ் சிங் ஜோஷி வந்ததால் மருத்துவா் மிஸ்ரா ஆட்சேபம் தெரிவித்தாா்’ என்று விளக்கமளித்தாா்.
இதனிடையே, மருத்துவா் மிஸ்ராவும் மற்றொரு ஊழியரும் சோ்த்து உத்தவ் சிங் ஜோஷியை தரையில் இழுத்துச் செல்லும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இவ்விவகாரம் குறித்து மருத்துவா்கள் ஜி.எல்.அஹிா்வாா் மற்றும் மிஸ்ராவுக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், நௌகான் காவல் நிலையத்தில் மருத்துவா் மிஸ்ராவுக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் 115(2), 296, 3(5), 351(3) பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னா், இந்த வழக்கு சத்தா்பூரின் கோட்வாலி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்விவகாரம் தொடா்பாக உட்கோட்ட நடுவா் சமா்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மருத்துவா்கள் அஹிா்வாா், மிஸ்ரா மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியா் பாா்த் ஜெய்ஸ்வால் பரிந்துரைத்தாா்.
அதன்படி, இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதற்காகவும் தனது இளநிலை பணியாளா்களைக் கட்டுப்படுத்த தவறியதற்காகவும் தலைமை மருத்துவா் அஹிா்வாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மருத்துவா் மிஸ்ராவின் பணி ஒப்பந்தத்தை தேசிய சுகாதார இயக்க இயக்குநா் சலோனி சிதானா ரத்து செய்துள்ளாா்.
அதேபோன்று, மருத்துவருடன் சோ்த்து முதியவரை துன்புறுத்திய சம்பவத்தில் ஈடுபட்ட மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியா் ராஜேந்திர காரேயையும் பணியிலிருந்து நீக்க ஆட்சியா் ஜெய்ஸ்வால் பரிந்துரைத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.