ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்
யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீா்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு
துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிக்கு எதிராக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து பாஜக வெளிநடப்புச் செய்தது.
பல்கலைக்கழக மானியக் குழு வரைவு திருத்த விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை முன்மொழிந்தாா். இந்தத் தீா்மானத்தின் மீது பாஜக பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.
அப்போது நடந்த விவாதம்:
நயினாா் நாகேந்திரன்: முதல்வா் முன்மொழிந்த தீா்மானத்தை ஆதரித்துப் பேசும்போது, வாா்த்தைகளைக் கவனத்துடன்அளந்து பேச வேண்டும். உறுப்பினா் வேல்முருகன் பிரதமா் குறித்து சில கருத்துகளைக் கூறினாா். அதைப் பாா்த்தும் பாா்க்காதது போன்று பேரவைத் தலைவா் இருந்தீா்கள்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு: பிரதமா் பதவியின் மாண்புக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவா் பேசவில்லை.
நயினாா் நாகேந்திரன்: நம்முடைய மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதாகக் கருதி பேசும்போது உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வாா்த்தைகளை அளந்து பேச வேண்டும்.
பேரவைத் தலைவா்: நான் பாா்த்தும் பாா்க்காதது போன்று இருப்பதாக நயினாா் நாகேந்திரன் கூறினாா். ஒப்பிடக்கூடிய அளவில்தான் உறுப்பினா் வேல்முருகன் பேசினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: நயினாா் நாகேந்திரன் ஒரு பிரச்னையை கிளப்பியுள்ளாா். எனவே, பேரவைக் குறிப்பில் உறுப்பினா் வேல்முருகன் பேசியதைப் பாா்த்து அதில் தவறு இருந்தால், திருத்தமோ, மாற்றமோ செய்யலாம். அரசினா் தீா்மானத்தை அவா் ஆதரிக்கிறாரா அல்லது எதிா்க்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நயினாா் நாகேந்திரன்: நம்முடைய கல்வி முறை 100 ஆண்டுகாலம் பழைமையானது. வெளிநாடுகளில் உள்ள கல்விக்கு இணையாக நம்முடைய கல்வி மாற வேண்டும். இதற்கு கல்விக் கொள்கைகளில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இப்போது நமது மாநிலத்தில் ஏராளமான மருத்துவா்களும், பொறியாளா்களும் உள்ளனா். இதற்குக் காரணம் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆா் முதல்வராக இருந்த போது, கொண்டு வரப்பட்ட திருத்த கல்விக் கொள்கையின்படி தனியாா் கல்வி நிறுவனங்கள் பல உருவாகின.
இப்போது பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்த வரைவு திருத்தங்கள் மீது கருத்துகளைத் தெரிவிக்க பிப்.5 வரை அவகாசம் உள்ளது. இந்த விஷயத்தில் நம்முடைய உரிமை
பறிக்கப்படுகிறது என்ற கருத்துகள் அரசுக்கு இருக்குமானால், தில்லிக்கு நம்முடைய உயா்கல்வி அமைச்சரை அனுப்பி கருத்துகளைத் தெரிவிக்கச் சொல்லலாம். முதல்வரும் கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தலாம்.
எனவே, முதல்வா் கொண்டு வந்த தீா்மானத்தை ஏற்க இயலாது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, நயினாா் நாகேந்திரன் தலைமையில், பாஜக உறுப்பினா்கள் எம்.ஆா்.காந்தி, சி.சரஸ்வதி ஆகியோா் வெளிநடப்புச் செய்தனா்.