ரஃபேல் நடால்… இது காயங்கள் நிறைந்த காதல் கதை! | Rafael Nadal
ரஃபேல் நடால் எனும் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. டேவிஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றுவிட, ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. இதோ, பலரும் கண்ணீர் மல்கக் கவி பாடத் தொடங்குவார்கள். அவன் சாதனைகளை செய்யுளாய் வடிப்பார்கள். அவன் வீரதீர பராக்கிரமத்தை பரணியாய் இயற்றுவார்கள். அவனைக் கொண்டாடும் நோக்கில் அவன் புகழ் பாடி புலம்பித் தவிப்பார்கள்.
22 ஆண்டுகளாய்த் தங்கள் உயிரில் கலந்த அந்தப் போராளியின் இன்னொரு துளி வியர்வையை, இன்னொரு முனகலை அனுபவிக்க முடியாத துக்கத்தில் அழுவார்கள். அதிலும் பெரும்பாலானாவர்கள், கிராண்ட் ஸ்லாம் எண்ணிக்கை இருப்பத்திரண்டோடு முடிந்துவிட்டதே என்று ஏங்குவார்கள்.
அவன் சந்தித்த காயங்களை ஏசுவார்கள். தொடர்ந்து காயங்கள் சந்தித்த அவன் உடலை நினைத்து வருந்துவார்கள். அந்தக் காயங்கள் மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால்… அப்படியே கனவுலகில் மிதக்கத் தொடங்குவார்கள். நானும் அதில் ஒருவன் தான். அப்படி கனவில் மிதந்தவன் தான். இப்போது… நான் எழுதும் இந்தக் கவி, இந்தப் பரணி, இந்தச் செய்யுள் அதைப் பற்றியதுதான். அவன் காயங்களைப் பற்றியதுதான்!
‘what if’ என்ற உலகத்தில் நாம் அனைவருமே வாழ்ந்திருப்போம். வாழ்ந்துகொண்டிருப்போம். நம் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ விஷயங்களை திருத்தி ஒரு பூரணமான கதைக்களத்தை உருவாக்கியிருப்போம். அது மிகவும் அழகாக வேறு இருக்கும். உறவுகளை முறித்த அந்தவொரு உரையாடல் நடக்காமல் போயிருந்தால்… இன்னும் ஒரு நிமிடம் கூடுதலாய் யோசித்து அந்த மெசேஜை அனுப்பியிருந்தால்… அப்பாவின் கை நீளும்போது அம்மாவின் குரல் ஓங்கியிருந்தால்… 2003 ஃபைனலில் டாஸ் வென்ற கங்குலி பௌலிங் தேர்வு செய்யாமல் இருந்திருந்தால்… எல்லாமே நன்றாகத்தானே இருந்திருக்கும்! நாம் தவறவிட்ட அந்த 12b பஸ்ஸில் எல்லோருமே இப்போது ஏறி உலா வந்துகொண்டுதான் இருப்போம். அதுவொரு அலாதியான பயணம். நடால் ரசிகர்களாகிய நாம் எல்லோருமே அதில் பெரும்பயணம் செய்தவர்கள் தானே.
ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் ஜோகோவிச்சுக்கு (24) அடுத்தபடியாக இருக்கிறார் நடால். இரண்டாவது இடம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. இங்கேதான் மனம் வரலாற்றை மாற்றப் போராடும். ஜோகோவிச் மொத்தம் 76 தொடர்களில் பங்கேற்றிருக்கிறார். நடாலோ மொத்தம் 68 கிராண்ட் ஸ்லாம்களில் 22 பட்டங்கள். கிராண்ட் ஸ்லாம் வெற்றி சதவிகிதத்தில் ஜோகோவிச் 31.58% வைத்திருக்க, நடாலுக்கு 32.35% இருக்கிறது.
ஆக, நடால் இன்னும் அதிக கிராண்ட் ஸ்லாம்களில் பங்கேற்றிருந்தால் நிச்சயம் ஜோகோவிச்சை முந்தியிருப்பார். 25 கிராண்ட் ஸ்லாம்கள் வென்ற முதல் ஆள் என்ற வரலாறும் படைத்திருப்பார். ஏன் அது வாய்க்கப்பெறவில்லை - அந்தக் காயங்கள்.
20 ஆண்டுகளாக தொழில்முறை டென்னிஸ் விளையாடி வரும் ஜோகோவிச் உடல்நலக்குறைவால் தவறவிட்டது வெறும் மூன்றே கிராண்ட் ஸ்லாம்கள் தான். அதேசமயம் 2003 விம்பிள்டனில் அறிமுகம் ஆன நடால், அதன்பிறகு தவறவிட்டிருப்பது 17 கிராண்ட் ஸ்லாம்கள். தன் இரண்டாவது ஆண்டிலேயே 2 தொடர்களை காயம் காரணமாகக் காவுகொடுத்தார் அவர். அட, 2003ன் முதலிரு கிராண்ட் ஸ்லாம்களுமே காயத்தால் தவறவிட்டதுதான்! இந்த 17 தொடர்களில் அதே 35 சதவிகிதத்தில் பட்டம் வென்றிருந்தால், நிச்சயம் இன்னும் 5 பட்டங்களாவது கூடியிருக்கும். அட, அவர் 30 வயதைத் தொடுவதற்கு முன் தவறவிட்ட எட்டு தொடர்களில் மூன்றை வென்றிருந்தாலும் நம்பர் 1 அரியணையில் அமர்ந்திருக்க முடியுமே!
இப்போது சொல்லுங்கள்… நடாலின் ரசிகர்கள், ‘அந்தக் காயங்கள் ஏற்படாமல் இருந்திருந்தால்’ என்று புலம்புவது நியாயம் தானே! ஒரு மகத்தான நாயகனின் கரியர் உச்சத்தில் முடியவேண்டும் என்று ஆசைப்படுவது வாஸ்தவம் தானே. நீங்கள் இதை சிறுபிள்ளைத்தனமான வாதம் என்று சொல்லலாம். உண்மை தான். இன்று ஒரு விளையாட்டு வீரனின் ஓய்வுக்குக் கண்ணீர் சிந்தும் ரசிகன் என்பவன் சிறுபிள்ளை தானே!
ஆனால், இந்த பார்வை இப்போது முழுமையாக மாறிவிட்டது. கதை, கலை, காதல் என ரசித்த, அனுபவித்த பல விஷயங்கள் அந்தப் பார்வையை மாற்றியிருக்கின்றன.
கதைகள்… அவையே வரலாற்று நாயகர்களை வாழவைக்கின்றன. அது எழுத்து வடிவமாய் இருக்கட்டும், இல்லை காட்சி வடிவமாய் இருக்கட்டும், ஒருவனின் அருமையையும், பெருமையையும் கடத்துபவை வார்த்தைகள் தான். ஆனால் அந்தக் கதைகள் எல்லோருக்கும் சிறப்பாய் அமைந்துவிடுவதில்லை. சிறந்த மனிதர்களெல்லாம் வரலாற்றால் அதிகம் நினைவுகூறப்படுவதில்லை. சிறந்த கதை கொண்ட மனிதர்கள் தான் வரலாற்றால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். உதாரணம், மாவீரன் அலெக்சாண்டரை விட அதிகமாய் பேசப்பட்டிருக்கும் கஜினி முகமதுவின் கதை.
சினிமாவைக் கொண்டாடும் நமக்கு அது புரியாத விஷயம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு நல்ல கதைக்கும், நல்ல டிராமாக்கள் தேவைப்படுகின்றன. நல்ல திருப்பங்கள் தேவைப்படுகின்றன. கதையின் போக்கை மாற்றும், தங்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றும் காட்சிகள் தேவைப்படுகின்றன. சினிமா மொழியில் சொல்லவேண்டுமெனில் ‘பிளாட் பாயின்ட்கள்’. ஹீரோவின் வெற்றியை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், வெற்றியை மட்டுமே யாரும் ரசிப்பதில்லை. அவன் தோல்வியில் இருந்து மீள்வதையும், சரிவிலிருந்து எழுவதையுமே யாருமே விரும்புவார்கள். அதனால்தான், ஒவ்வொரு கதை எழுதும்போதும் அதன் கதாசிரியர் ஹீரோவின் வாழ்க்கையில் பல டிராமாக்களை ஏற்படுத்தி அவனை வீழ்ச்சியடையச் செய்கிறார். அதனால்தான் பின்னர் அவன் வெற்றி பெறும்போது அது கொண்டாடப்படுகிறது. பேசப்படுகிறது. கஜினி முகமதுவின் கதை போல் தான்.
அவன் பெற்ற வெற்றியல்ல கஜினி முகமதுவின் அடையாளம்… அதற்கு முன்பான 17 தோல்விகள் தான். தோற்றவன், வீழ்பவன் எழும் கதைகளை விட மிகச் சிறந்தது வேறென்ன இருக்க முடியும்! நடாலின் கதை அப்படிப்பட்ட ஒன்றுதான்.
இப்போது அவர் கரியரின் முடிவுக்கு எழுதப்படும் கட்டுரைகளை விடுங்கள். அவரது கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் பற்றிய ரிவ்யூ கட்டுரைகளே ஒரு சினிமா கதையைப் போலத்தான் இருக்கும்.
ஒரு ஃபிரெஞ்ச் ஓப்பன் வெற்றியைப் பற்றிய கட்டுரையில் ஏஸ்கள், வின்னர்கள், சர்வ் வெற்றி சதவிகிதம் போன்ற எண்கள் இருக்காது. அது முதல் சுற்றில் தொடங்கி ஃபைனல் வெற்றியில் முடியாது. அது மெல்போர்னிலோ, நியூ யார்க்கிலோ, மார்ஸேவிலோ தொடங்கும். அங்கு ஏற்பட்ட காயத்தில் தொடங்கி, அதன்பிறகான தடுமாற்றங்கள், மருத்துவ பரிசோதனைகள், ஊடகங்களின் கேள்விகள், நடால் பங்கேற்பது பற்றிய சந்தேகங்கள், கம்பேக் தொடர்களான மாட்ரிட்டிலும், ரோமிலும் சந்தித்த அதிர்ச்சித் தோல்விகள் என்று விரியும். அதன்பின்னரே அந்தக் கட்டுரை பாரிஸில் கால் பதிக்கும். அங்கு, தொடர் தொடங்கும் முன் நடாலிடம் கேட்கப்பட்ட கேள்விகள், குழப்பங்கள், மீடியாவும், ரசிகர்களும் கொண்டிருந்த சந்தேகங்களை அடுக்கடுக்காய் அடுக்கிவிட்டு, போட்டிகளில் கண்ட சில பின்னடைவுகள், போட்டிகளுக்க நடுவே எடுத்துக்கொண்ட மெடிக்கல் பிரேக் என குட்டிக் குட்டி டிராமாக்கள் பற்றிய குறிப்புகளும் இருக்கும்.
இவை அனைத்தையும் எழுதிவிட்ட பிறகு, அந்த ஃபைனல் பற்றி ஒரு பத்தி. அந்த எழுத்துக்களுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் விதமாக… தூசி பறக்க, புழுதி படர்ந்த அந்த ஆடையோடு, களிமண் தரையில் வீழ்ந்து, தன் கைகளால் கண்ணை மூடி அழும் நடாலின் அந்தப் புகைப்படம்… (இதுதாண்டா சினிமா என்ற மீம் டெம்ப்ளேட் உங்கள் மனதுக்கு வந்து போகிறதா!)
இப்படித்தான் அவரது ஒவ்வொரு வெற்றியைப் பற்றிய கதையும் எழுதப்பட்டிருக்கும். சீனுக்கு சீன் டிராமாவும், பத்து நிமிடத்துக்கு ஒரு ‘பிளாட் பாயின்ட்டும்’ நிறைந்த திரைக்கதை அது. எத்தனை முறை மீண்டு வந்தாலும், மீண்டும் ஒரு அடியை சந்திக்கும் அந்த நாயகனின் வலி, எத்தனை வலிகள் வந்தாலும் அதைத் தாங்கும் அவன் வலிமை, மீண்டும் இன்னொரு முறை எழுச்சி பெறும் அவன் உறுதி… இதை விடச் சிறந்த டிராமா எது இருந்திடமுடியும்!
இதையெல்லாம்விட, அந்த நாயகனுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, மிகப் பெரிய சவால் அவரேதான் என்று நினைக்கும்போது…
நடால் தொடர்ந்து காயம் அடைவது அவரது மோசமான ஃபிட்னஸின் காரணமாக அல்ல. Mueller–weiss syndrome என்ற பிரச்னை அவருக்கு சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருக்கிறது. கால் பாத எலும்பு உருக்குலைவதால் ஏற்படும் பிரச்னை எது. தொடர்ந்து வலி ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். ஆனாலும், கிட்டத்தட்ட 2021 வரை அறுவை சிகிச்சையே செய்துகொள்ளாமல் அதைப் பொறுத்துக்கொண்டேதான் ஆடினார். ஒவ்வொரு முறை அந்த வலி அதிகரிக்கும்போதும் அதைப் பொறுத்துக்கொண்டும், ஊசி போன்றவற்றால் சமாளித்துக்கொண்டுமே களத்தில் தொடர்ந்தார். 2022 ஃபிரெஞ்சு ஓப்பனை வென்றுவிட்டு அவர் பேசியபோது, அந்த வலியை ஒவ்வொருவராலும் உணர முடிந்தது. “நான் அடிக்கடி காயமடைபவன் இல்லை. காயத்துடனேயே வாந்துகொண்டிருப்பவன். என்னுடைய தினசரி வாழ்க்கை மோசமாகிக்கொண்டே இருக்கிறது” என்று கூறினார் அவர்.
ஆம், காயத்துடனேயே வாழ்ந்தவர் அவர். ஒவ்வொரு முறை களமிறங்கியபோதும்… ஃபெடரரை, ஜோகோவிச்சை, முர்ரேவை, மெத்வதேவை, அல்கரஸை மட்டும் அவர் எதிர்கொள்ளவில்லை. அவர்களால் மட்டும் சவால்களைச் சந்திக்கவில்லை. தன் உடலையும் எதிர்கொண்டார். அந்த வீரர்களை விடவுமே தனக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கிய அடிபட்ட அவர் உடலை ஒவ்வொரு முறையும் வீழ்த்தப் போராடினார்.
இது கஜினி முகம்மதுவின் கதை ஒரு முழுமையான கமர்ஷியல் பேக்கேஜ். அந்தக் காயங்கள் இல்லாமல் இந்தக் கதை சாத்தியம் இல்லையே!
அதுமட்டுமல்ல, அவர் போராளியாகத்தான் அறியப்படவேண்டும் என்று விதி கூட தீர்மானித்திருக்கவேண்டும்.
அடிக்கடி யோசிப்பேன், மற்ற கிராண்ட் ஸ்லாம்களையெல்லாம் விட நடால் ஏன் ஃபிரெஞ்சு ஓப்பனில் ஆதிக்கம் செலுத்தினார் என்று! டெக்னிக்கல் காரணங்களை விட்டுவிடுங்கள்... மற்ற 3 கிராண்ட்ஸ்லாம்களின் முக்கிய அரங்கின் பெயர்கள் டென்னிஸ் வீரர்களின் பெயர்களாகவே இருக்கும். ஆஸ்திரேலியன் ஓப்பன் - ராட் லேவர். அமெரிக்கன் ஓப்பன் - ஆர்த்தர் ஆஷ். விம்பிள்டன் சென்டர் கோர்ட், ‘சென்டர் கோர்ட்’ என்று தான் அழைக்கப்படுகிறது. ஆனால், பிரெஞ்சு ஓப்னின் மத்திய அரங்கின் பெயர் - ரோலண்ட் கேரோஸ். முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த ஒரு போராளியின் பெயர்!
அதுமட்டுமல்ல, அந்த அரங்கத்தில் எழுதப்பட்டிருக்கும், ‘victory belongs to the most tenacious’ (மிகவும் உறுதியானவர்களுக்கே வெற்றி சொந்தம்) என்ற வாசகம் கூட முதன்முதலாக மாவீரன் நெப்போலியனைக் குறிக்கச் சொல்லப்பட்டது. புழுதி பறக்கும் அந்த அரங்கின் பெயரில் இருந்து, எழுதப்பட்டிருக்கும் வாசகம் வரை ஒவ்வொன்றும் போராளிகளுக்கான உவமானங்கள். அங்குதான் நடால் தடம் பதிக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
நினைத்துப் பாருங்கள்… பின்னொரு நாளில் நடாலைப் பற்றி யாரேனும் கேட்கும்போது, நீங்கள் எப்படி கதை சொல்ல விரும்புவீர்கள்? ‘அதிக கிராண்ட் ஸ்லாம் ஜெயிச்சவரு’ என்று ஒற்றை வரியில் சொல்வீர்களா? கேட்பவர், ‘அப்படியா’ என்று ஒற்றை வார்த்தையில் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவார். அவ்வளவுதான். அது வேறு எந்த தாக்கமும் ஏற்படுத்துவிடாது. எண்களால் உணர்ச்சிகளை கிளிர்ச்சிப்படுத்த முடியாது.
830 மீட்டர் உயரக் கட்டிடம் என்று புர்ஜ் கலிஃபா பற்றி ஒருவரிடம் சொன்னால், அதே ‘அப்படியா’ என்ற பதில் மட்டும்தான் வரும். அவ்வளவுதான். யாரும் அந்தக் கட்டடத்தை ஆராதிக்கமாட்டார்கள். அதன் உயிர்ப்பை உணரமாட்டார்கள். அந்தக் கட்டிடம் வெறும் கட்டிடமாக மட்டுமே இருக்கும். ஒரு தாஜ்மஹாலோ, கொலேசியோமோ தான் ஓவியமாய் அவர் வீட்டை அலங்கரிக்கும். அவை, அதிசயம் என்பதால் தான். ஆனால், அவற்றை அதிசயம் ஆக்குவதே அவை கொண்டிருக்கும் கதைகள் தான்!
நடாலைப் பற்றிய கதையை, அவன் காயத்தில் இருந்து மீண்டு ஒவ்வொரு முறையும் வென்றதை நீங்கள் சொல்லும்போது, கொலேசியத்தில் கோலோச்சிய போர்வீரனாய் அவன் தெரியவேண்டும். அவன் உங்கள் இதயத்தை உறையவைத்ததையும், அதிவேகமாய்த் துடிக்கவைத்ததையும், நெகிழவைத்ததையும் அனுபவித்துச் சொல்லும் உங்கள் கண்களில் அந்த ஆக்ரா வெள்ளை மார்பிலில் தெரியும் ஷாஜகானின் காதல் பிரதிபலிக்கவேண்டும். அந்தக் கதைதான் அதைக் கேட்பவரின் இமைகளுக்குள் இடியை இறக்கி, கண்ணீர் மழையைப் பொழியச் செய்யும். நடாலின் கதை அப்படி இருக்கவேண்டும்!
இங்கே கொலேசியம், தாஜ்மஹால் என்ற அதிசயங்களை ஒப்பிட்டிருந்தாலும், நடாலைப் பற்றியும், அந்தக் காயங்களைப் பற்றியும் சிந்திக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வருவது பீஸா நகரத்து சாய்ந்த கோபுரம் தான். என்னைப் பொறுத்தவரை உண்மையில் அதுதான் அதிசயம். அறிவியலைப் பொய்யாக்குவதுதான் அதிசயம் எனில், அதுமட்டுமே அதிசயம். புவியீர்ப்பைப் பொய்யாக்கி, பல பூகம்பங்களையும் கூட தாங்கி நின்றிருக்கிறது. பாதத்தில் பிரச்னை கொண்டிருந்தாலும், தொடர்ந்து அதைத் தாங்கிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்த நடாலுக்கும், அடித்தளத்தில் பிரச்னை கொண்ட இந்த கோபுரத்துக்கும் தான் அதிக ஒற்றுமைகள் இருப்பதாகத் தோன்றுகிறது.
ஒரு வீரனின் காயத்தை, வலியை, கண்ணீரை இப்படி ஆதாரிப்பது நிச்சயம் சரியில்லை. ஆனால், நான் முன்பே சொன்னதுபோல் கதைகள் பற்றிய ஈர்ப்பு அந்தக் காயங்களை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. ஒரு மிகச் சிறந்த கதை அமைய அவை தேவைப்படுகிறதுதானே! நடாலுக்கு அப்படியான கதைகள் அமைய அந்தக் காயங்களே காரணம் என்று நினைக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
யோசித்துப் பாருங்கள், கடலில் மிதக்கும் எந்தக் கப்பல் கதை ஆகியிருக்கிறது? மூழ்கிய கப்பல் தானே காவியம் ஆகியிருக்கிறது! அந்தக் கதைபோல், அந்தக் காதல் போலத்தான் நடாலின் கதையும். அதனால்தானோ என்னவோ, காதலின் நகரமான பாரிஸில் இவன் சிலை நிறுவப்பட்டிருக்கிறது!
அற்புதமான கதைக்களம் அமைக்க இந்தக் காயங்களே காரணம் என்று சொல்வதும் கூட ஒருவகையில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஆறுதல்தான். கதைகளுக்கு அவை தேவைப்படலாம். ஆனால், காதலுக்கு இல்லை. எந்தக் காதலும் பெர்ஃபக்டானது இல்லை. அதிலிருக்கும் imperfection-கள் தான் அதை அழகாக்குகின்றன. அதிசயமாக்குகின்றன. சாய்ந்த கோபுரம் போல்! நடாலின் காயம் கூட அப்படியான ஒன்றுதான்.
அதேசமயம், நாம் காதலைப் பற்றி யோசிக்கும்போது அந்த imperfection-கள் நினைவுக்கு வரப்போவதில்லையே. அது நம் தூக்கத்தைக் கெடுத்த நாள்கள்… நிம்மதியாய் உறங்கவைத்த இரவுகள்… இதயத்தை நிற்கவைத்து, அதன்பின் கொடுத்த பேரானந்தம்… கடைசிவரை போராடக் கொடுத்த ஊக்கம்… துவண்டு கிடந்தபோதெல்லாம் கொடுத்த நம்பிக்கை… உலகமே சந்தேகித்த போதெல்லாம் கொடுத்த அரவணைப்பு… இவைதானே அந்தக் காதலின் மிச்சங்கள். நடால் என்ற காதல் நமக்குக் கொடுத்தது அதுதானே. போக, யாரும் நமது காதல்தான் உலகில் சிறந்தது என்று அளவிடுவதில்லையே. அது நமக்குப் பிடித்திருக்கிறது. நாம் கொண்டாடவும், கண்ணீர் சிந்தவும் அதுவே போதுமானது! அந்தக் காதலை நியாயப்படுத்த காரணங்கள் தேவையில்லை. குறிப்பாக எண்கள் போன்ற அளவீடுகள் தேவையில்லை.
காதலைத் தவறவிடாமல் இருக்கக் காலம் சொல்லும் பாடம் ஒன்றுதான்… உங்கள் காதலரின் பிரச்னைகளை, தவறுகளை, அவர்களுக்கு இருக்கும் சிக்கல்களை… அதுதான் அந்த imperfection-களை ஏற்று, அரவணைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான்.
நடாலின் காயங்களை அரவணைப்போம். இந்தக் காதல், காலம் கடந்தும் நீடித்திருக்கும்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...