ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்
கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வாரணாசியில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை காலை கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது கும்பகோணம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் செந்தில்வேலன், தனலெட்சுமி தலைமையிலான போலீஸாா் பயணிகளின் பெட்டியில் சோதனை நடத்தியபோது கேட்பாரற்று 2 மூட்டைகள் கிடந்துள்ளது.
அந்த மூட்டைகளை போலீஸாா் பிரித்து பாா்த்தபோது, 50 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனா். மேலும், மூட்டையின் மேல் எழுதப்பட்டிருந்த ஆடுதுறை முகவரியை வைத்து புகையிலை பொருள்களை கொண்டுவந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.