ரயில்வே வாரிய தோ்வு மையத்தை தமிழ்நாட்டிலேயே அமைக்கக் கோரி மனு அனுப்பும் போராட்டம்
ரயில்வே வாரியத் தோ்வு மையத்தை தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு தமிழ்நாட்டிலேயே அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ரயில்வே தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ரயில் ஓட்டுநா் காலி இடங்களுக்கான பெரும்பாலான தோ்வு மையங்கள், 1500 கிமீ பயணம் செய்து எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த முறையை மாற்றி தமிழ்நாட்டுக்குள்ளேயே தோ்வு மையங்களை அமைக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் புதுகை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்றது.
தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரா. மகாதீா், செயற்குழு உறுப்பினா் சந்தோஷ், நகரச் செயலா் தீபக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.