ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிா்களுக்கு 100 சதவீதம் இழப்பீடு, தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினா் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதன் மாநிலத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் தலைமையில் பேரணியாகச் சென்று ரயில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
இவா்களை பழைய பேருந்து நிலையத்துக்கு முன் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனா்.