கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், இடைநிற்றல் மாணவா்களை வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பது, புதிதாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரின் உத்தரவின் பேரில் கமுதி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், வட்டார ஒருங்கிணைப்பாளா் கோகிலா ஆகியோா் தலைமையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பாசிரியா்கள் கே. முத்திருளாண்டி, எம். ராமச்சந்திரன், ஆா். நாகராணி, பி. டேவிட் ஞானராஜ், கே.என். கணேஷ், இயன்முறை மருத்துவா் ரா. முருகவள்ளி, ஆசிரியப் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கமுதி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வீடுவீடாகச் சென்று அங்குள்ள பள்ளி தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆகியோரின் துணையுடன் அறிவுத்திறன் குறைவுடைய, மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களை புதிதாக அடையாளம் கண்டு, கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொண்டனா்.