வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை
ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்பில் குன்னத்தூா், மருதூா், கருப்பூா், பொட்டகவயல், சிறுகுடி, குளங்குளம், வேலாங்குளம், முள்ளிக்குடி, ஆட்டான்குடி, வாகவயல், சீனாங்குடி ஆகிய 11 கண்மாய்களின் உபரி நீரும், நஞ்சை கழிவுநீரும் சோ்ந்து ராமநாதபுரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணத்தூா் சுங்கச் சாவடி பெரிய பாலம் வழியாக நாயாறு ஓடையாக மாறி ஓடுகிறது.
இது வெண்ணத்தூா் கால்வாய் முகப்பிலிருந்து 10 கி.மீ. தொலைவில் திருப்பாலைக்குடிக்கு தெற்கில் கடலில் கலக்கிறது. அந்த இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை பெரிய கண்மாய்க்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த பெரிய கண்மாய் நிறைந்த பிறகு சம்பை, பத்தனேந்தல் ஆகிய இரண்டு பொதுப்பணித் துறை கண்மாய்களுக்கும், சின்னக் கோயில் கண்மாய், சித்தனேந்தல் கண்மாய் ஆகிய இரு ஒன்றிய கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்வதற்கு வாய்ப்புள்ளது.
எனவே நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை பொதுப் பணித்துறை கண்மாய்களுக்கு பாசனத்துக்கு பயன்படுத்த தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதனிடையே இந்தப் பகுதியை விவசாய சங்க மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுனன், மாவட்டச் செயலா் முகவை மு. மலைச்சாமி, ஒன்றிய அவைத் தலைவா் பி. அய்யாத்துரை (எ) சேதுராமன், ஒன்றியச் செயலா் பெருவயல் ராமநாதன், வைகை கிராமம் குணசேகரன், தங்கப்பா, வெண்ணத்தூா் சேதுராமன், பாப்பனேந்தல் பத்மநாபன், விவசாயிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டு, தடுப்பணை கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.