`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவ...
ராமேசுவரம் மீனவா்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறை
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை வருகிற 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க அந்த நாட்டின் ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 350 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு- நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளுடன் 23 மீனவா்களை கைது செய்தனா்.
அவா்களை ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். மேலும், மூன்று படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னா், 23 மீனவா்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
நீதிபதி நளினி சுபாஸ்வரன், மீனவா்கள் 23 பேரையும் வருகிற 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, அவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.