மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு விடுமுறை, சமையல் அறைக்கு சீல்- நாமக்க...
ரீல்ஸ் பார்த்து ஆபத்தை உணராமல் அணைகளில் குவிந்த மக்கள்! -துரித நடவடிக்கை எடுத்த புதுச்சேரி ஆட்சியர்
வடகிழக்கு பருவமழையால் புதுச்சேரியிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதேபோல விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடூர் அணை அதன் மொத்தக் கொள்ளளவான 32 அடியை எட்டியதால், அதன் உபரி நீரை வெளியேற்றினர்.
அதனால் புதுச்சேரியிலுள்ள கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் கைக்கிளப்பட்டு படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. அதையடுத்து தங்களை இன்ஃப்ளூயன்சர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், அந்த படுகை அணையை வீடியோ எடுத்து, `புதுச்சேரியில் குளிப்பதற்கு இப்படி ஒரு இடம் இருக்கிறதா… இப்படி ஒரு அணையா… இப்படி ஒரு சுற்றுலாத்தலமா…’ என்று சமூக வலைத்தளங்களில் ஹைப் கொடுத்து வருகிறார்கள்.

அதனால் குழந்தைகளுடன் அங்கு படையெடுக்கும் பொதுமக்கள் அதில் சாவகாசமாக குளித்து வருகிறார்கள். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் படுகை அணை என்பது குளிப்பதற்கான இடம் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், கிராமத்து சூழலில் இருப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளையும், அவற்றைக் கடக்கும் நீரின் போக்கையும் ஓரளவு அறிந்திருப்பார்கள்.
பல நேரங்களில் நீச்சல் தெரிந்திருந்தாலும் அவர்களே வெள்ளத்தில் சிக்கிக் கொள்வது உண்டு. அப்படியான சூழலில் நீச்சல் தெரியாத, நீர் நிலைகள் குறித்த புரிதல் சிறிது கூட இல்லாத மக்கள், கூட்டம் கூட்டமாக சென்று குளிப்பது, சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும் `வீடூர் அணை திறக்கப்பட்டிருப்பதால் சங்கராபரணி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது’ என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்த எச்சரிக்கையை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழையில் சங்கராபரணி ஆற்றின் செல்லிப்பட்டு தடுப்பணையில் தனது பெற்றோருடன் குளிக்கச் சென்ற சபியுல்லா என்ற 12 வயது சிறுவன், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
அதேபோல கடந்த 2024-ம் ஆண்டு தன்னுடைய பெற்றோர்களுடன் குளிக்கச் சென்ற லியோ ஆதித்யன் என்ற 16 வயது சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான். அதன்பிறகு காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரின் தீவிர தேடுதலால், நான்கு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

இப்படியான சூழலில்தான் படுகை அணைகளை குற்றால அருவி போல வர்ணித்து ரீல்ஸ் போடும் இன்ஃப்ளூயன்சர்கள் கொடுக்கும் ஹைப்களால், மக்கள் குடும்பத்துடன் அங்கு படையெடுத்தனர். அதனால் ஆபத்தை உணராமல் தடுப்பணைகளில் மக்கள் குளிப்பது குறித்து, ஜூ.வி சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.
அதனடிப்படையில் உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர், போலீஸார் மூலம் படுகை அணைகளுக்குச் செல்லும் வழிகளில் பேரிகார்டுகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
அத்துடன் சங்கராபரணி ஆறு மற்றும் படுகை அணைகளில் பொதுமக்கள் இறங்காதவாறு போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆட்சியரின் துரித நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.















