ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி
ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணிக்கு திரும்புவதால் பேட்டிங் குறைபாடுகள் நீங்கும் என சிஎஸ்கேவின் தற்காலிக கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டியளித்துள்ளார்.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் டாப் 10-இல் கடைசியில் முடித்தது. இதைவிட மோசமான ஆண்டாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு அமையாது என விமர்சனங்கள் வந்தன.
ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறியதால் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். இருந்தும் சிஎஸ்கே அணிக்கு 4 வெற்றிகள் மட்டுமே கிடைத்தது.
சென்னையில் மேக்ஸ்விஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தோனி சிஎஸ்கே அணி குறித்து பேசியதாவது:
ருதுராஜ் வருகிறார்
கடந்த சீசனில் பேட்டிங் ஆர்டர் ஒரு குறையாக இருந்தது. ஆனால், தற்போது சீரானது போலிருக்கிறது. ருதுராஜ் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதனால், பேட்டிங் பிரச்னை இல்லை.
2025-இல் சிஎஸ்கே தளர்ந்துபோய்விட்டது எனக் கூறமாட்டேன். ஆனால், சில ஓட்டைகளை அடைத்தாக வேண்டும்.
வரும் டிசம்பரில் மினி ஏலம் வருகிறது. அதில் அந்த ஓட்டைகளை நிரப்ப வேண்டும்.
கடந்த இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை. நல்ல சீசன் மாதிரி மோசமான சீசனும் வரும். அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம்.
குறைகளைச் சரிசெய்வோம்
என்ன பிரச்னை என்பது சரியாக கண்டறிந்து தீர்க்க வேண்டும். விளையாட்டில் உங்களுக்கு நல்ல நேரமும் இருக்கும் மோசமான நேரமும் இருக்கும்.
பொதுவாக சிஎஸ்கே அணி எப்போதும் நன்றாக விளையாடும் அணியாக இருக்கும். அதனால், செயல்பாடுகளை மட்டுமே பேச வேண்டும். அதேசமயம் நல்ல முடிவுகளும் வர வேண்டும். அது கடந்த சீசனில் கிடைக்கவில்லை.
குறைகளைச் சரிசெய்து எங்களது சிறந்த செயல்பாடுகளை அளிப்போம் என்றார்.