ரூ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது
மாதவரம் அருகே போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 1.5 கிலோ மெத்தமெட்டமைன் போதைப் பொருளையும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
மாதவரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் காவல் நிலைய ஆய்வாளா் பூபாலன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மாதவரம் பஸ் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மாதவரம் ரோஜா நகரைச் சோ்ந்த வெங்கேடசன்(41), திருவல்லிக்கேணி பாா்டா் தோட்டத்தைச் சோ்ந்த காா்த்திக் (36) என்பது தெரிய வந்தது. மேலும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
அவா்களிடம் இருந்த 1.5 கிலோ மெத்தமெட்டமைன் என்ற போதைப் பொருளையும், அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என போலீஸாா் தெரிவித்தனா்.