சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசத்திய இளம் 'Equestrian' சாம்பியன்ஸ் |Photo Album
ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த செல்ஃபி!
ஏறக்குறைய முப்பது ஆண்டு காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் மத்தியக் குழு உறுப்பினர், தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபி எப்படி அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சல் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த சலபதி உள்பட 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இத்தனை காலம், தனது நடமாட்டம் உள்பட அனைத்தையும் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டுவந்த சலபதி, தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபியால்தான் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
ஒடிஸா மாநில எல்லையையொட்டிய பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நக்சல் மத்திய குழுவின் உறுப்பினரான ஜெய்ராம் எனப்படும் சல்பதி என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவரை கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பவா்களுக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவர் சுட்டுக்கொல்லப்பட்டது முக்கியத்துவம் பெற்றது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒடிசாவில் நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தியவர் ராமச்சந்திர ரெட்டி எனப்படும் சலபதி என்று கூறப்படுகிறது.
இதுபோல, ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களிலும் இவர் தலைமையேற்று செய்திருக்கிறார் என காவல்துறை குற்றம்சாட்டுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சலபதி, பெரும்பாலும் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில்தான் நக்சல் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார்.
அவருக்கு 60 வயதாகிறது என்பதால் முட்டி வலி பிரச்னையால் அதிகம் நடமாடாமல் இருந்துள்ளார். பள்ளிக்குச் செல்லாத இவர், பல மொழிகளைப் படிக்கும் வல்லமை கொண்டிருந்ததாகவும், ராணுவத்தில் மேற்கொள்ளும் உக்திகள், கொரில்லா தாக்குதல்கள் என பலவற்றை கற்றறிந்திருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சலபதி காடுகளில் மறைந்து வாழ்ந்த காலத்தில், ஆந்திர -ஒடிசா எல்லை சிறப்பு மண்டலக் குழுவின் துணைத் தளபதியான அருணா என்கிற சைதன்யா வெங்கட் ரவியுடன் நெருங்கிப் பழகினார். பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
சலபதியைப் பிடிப்பது பல பாதுகாப்புப் படையினரின் இலக்காக இருந்த நிலையில்தான், அருணாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி அவரை அடையாளம் காண வழிவகுத்ததோடு, அவரது தலைக்கு ரூ. 1 கோடி வெகுமதி அறிவிக்கவும் காரணமாக இருந்தது.
இந்த செல்ஃபி கிடைத்ததே ஒரு பெரிய கதையாம், அதாவது மே 2016 இல் ஆந்திரத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து அங்கிருந்த நக்சலைட்டுகளின் ஸ்மார்ட்போனில்தான், தம்பதியினரின் இந்த செல்ஃபி கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதன் பிறகுதான், அவரது அமைப்பின் தீவிர இயக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதகாவும், எப்போதும், தன்னைப் பாதுகாக்கும் வீரர்களுடன் அவர் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதும் கொல்லப்பட்டவர்களில் சலபதியும் ஒருவர் என்பதை இந்த செல்ஃபி மூலமாகத்தான் அடையாளம் கண்டு உறதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் பற்றி கரியாபந்த் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நிகில் ரகேச்சா கூறியதாவது: சத்தீஸ்கரில் உள்ள குலாரிகத் வனப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததது. இதையடுத்து, ஒடிஸா மாநிலத்தின் நுவாபாடா மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு முதல் தொடா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட ரிசா்வ் காவல் படை (டிஆா்ஜி), மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), சத்தீஸ்கரில் இருந்து வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள நக்சல்களை பிடிக்கும் சிறப்புப் படையான ‘கோப்ரா’ மற்றும் ஒடிஸாவில் இருந்து சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஓஜி)ஆகிய படைகள் ஒருங்கிணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டது. அப்போது நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தளபதி உள்பட 14 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா் என்று அறிவித்துள்ளார்.