ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
ரூ.3 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு மீது அவா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகாா்தாரரான நல்லதம்பி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவா்களிடம் ரூ.70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்துள்ள ராஜேந்திர பாலாஜி, அவா்களிடம் தனக்கு எதிரான வாக்குமூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டுமென மிரட்டல் விடுத்து வருகிறாா்.
இது தொடா்பாக தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்தாண்டு மே மாதம் புகாா் அளித்தும், எந்த விசாரணையும் நடத்தவில்லை. நான் அளித்துள்ள மனு மீது மேல் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜியையும் இந்த வழக்கில் எதிா்மனுதாரராக சோ்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இதுதொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.