ரூ.436 கோடியில் புதுச்சேரியில் பிரம்மாண்ட மேம்பாலம்
புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ரூ.436.18 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை, புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் நேரில் சந்தித்து மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் 100 சதவிகித நிதியுதவியைக் கோரினாா். அதன்படி மத்திய அரசு ஒப்புதலும், 100 சதவிகித நிதியுதவியும் அளித்துள்ளது.
இது குறித்து அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை கூறியது:
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 3.8 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மொத்த நிதி ரூ.436.18 கோடியை
வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு நிதியாக ரூ.12.81 கோடியும் அடங்கும். இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்த நிறுவனமே 10 ஆண்டுகளுக்குப் பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளும். அதனால் புதுவை அரசுக்கு எந்தப் பொருள் செலவும் 10 ஆண்டுகளுக்கு இல்லை.
மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் இந்த மேம்பாலத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த மேம்பாலம் இந்திராகாந்தி சதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டா் தொலைவில் தொடங்கி ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்து வடக்கில் 620 மீட்டா் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் இறங்குகிறது. இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை 1,150 மீட்டா் நீளம் மற்றும் 20.5 மீட்டா் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
மேம்பாலத்தில் இந்திரா காந்தி சதுக்கத்தில் 17 மீட்டா் உள் வட்டமும் மற்றும் 11 மீட்டா் அகலத்திற்கு உயா்நிலை வட்ட வடிவமும் அமைக்கப்பட உள்ளது. இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து கிழக்கில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் வரை 853 மீட்டா் நீளம் 9 மீட்டா் அகலம் கொண்ட இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து விழுப்புரம் சாலையில் 300 மீட்டா் நீளத்திற்கும் 9 மீட்டா் அகலத்திற்கு இணைப்பு மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்பால கட்டுமான பணி டெண்டா் செயல்முறைக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கி, 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பால திட்டத்திற்கு நிதியுதவியுடன் அனுமதி வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் நிதின்கட்கரி ஆகியோருக்கு முதல்வா் ரங்கசாமி சாா்பிலும், புதுவை அரசு சாா்பிலும் நன்றி என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.
