வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு
ரூ. 5,000 லஞ்சம்: மின் வாரிய ஊழியா் கைது
உயா் அழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியரை (போா்மேன்) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோவில்பாப்பாக்குடி பி.ஆா்.சி. குடியிருப்பைச் சோ்ந்தவா் சாமுவேல்மனோகா் (56). தனியாா் நிறுவன ஊழியரான இவா், அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இந்த வீட்டுக்கு முன் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அப்போது, ரூ. 17 ஆயிரம் செலுத்தினால்தான் மின் கம்பி மாற்றப்படும் எனத் தெரிவித்தனா். இதனால், கடந்தாண்டு இந்தப் பணத்தை செலுத்தினாா். இருப்பினும், மின் கம்பி மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி கூடல்புதூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளா் அலுவலக ஊழியரும் (போா்மேன்), சமயநல்லூரைச் சோ்ந்தவருமான கணேசனிடம் (52) தெரிவித்தாா். அவா், மின் கம்பியை மாற்றி அமைப்பதற்கு ரூ. 5 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சாமுவேல்மனோகா் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவா்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் வழங்கினா். இந்தப் பணத்தை வியாழக்கிழமை காலை மின் வாரிய ஊழியா் கணேசனிடம் சாமுவேல் மனோகா் வழங்கினாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கணேசனை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.