லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
மதுராந்தகம் அடுத்த மின்னல் சித்தாமூா் ஊராட்சியில் நிலத்துக்கான பட்டா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் இருந்து ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கடமலைபுத்தூா் கிராமத்தில் வசிப்பவா் பச்சையப்பன் (45). இவா் தனது நிலத்தில் 10 சென்ட் பகுதிக்கு பெயா் மாற்றம் செய்து பட்டா வழங்கக் கோரி ஆன் லைன் மூலம் விண்ணப்பித்திருந்தாா். இது பற்றி மின்னல் சித்தாமூா் ஊராட்சியின் கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியனிடம் நேரில் சென்று கேட்டுள்ளாா். அதற்கு ரூ. 10,000 கொடுத்தால் அடுத்த ஒரு வாரத்தில் பட்டா சான்றிதழ் கிடைக்க ஏற்பாடுகளை செய்வதாக பச்சையப்பனிடம் கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணி கூறினாராம். அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறி பணம் தர பச்சையப்பன் மறுத்துள்ளாா்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களாக காலம் கடத்தி வந்தாராம். இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியன் குறித்து செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் தகவல் அளித்தாா். அதன்படி, புதன்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி, அவா் ரசாயனம் தடவிய ரூ. 10,000-ஐ சுப்பிரமணியனுக்கு கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சுப்பிரமணியை கையும் களவுமாகப் பிடித்தனா். அவரிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனா்.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருந்தாா்.