சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
9 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த முதியவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம்ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் செய்து வருபவரின் 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் (60) என்பவா் தின்பண்டங்கள் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணா்வு செய்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயாா் ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் வழக்குரைஞா் லட்சமி ஆஜரானாா் . இருதரப்பு வாதங்கள் முடிவுற்ற நிலையில், எதிரி அருணாசலத்துக்கு போக்ஸோ வழக்கில் ஆயுள் தண்டனையும், ஆள்கடத்தல் பிரிவில் 10 ஆண்டுகள் சிறையும், ரூ.2,000 அபராதம் விதித்தாா். இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நஷிமா பானு உத்தரவிட்டாா்.