ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்
புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்தது. ஆனால், அறிவிப்பு வெளியான நிலையில், ஊதியம் உயா்த்தி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மாறன் உள்ளிட்டோா் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகேயுள்ள மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் முன் திங்கள்கிழமை மாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காலையில் ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் பணியை முடித்த நிலையில், மீண்டும் கல்வித்துறை இயக்கக அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முற்றுகைப் போராட்டத்தில் சிறிது நேரம் முழக்கமிட்ட நிலையில் அனைவரும் கலைந்து சென்றனா்.