பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா்.
புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதன்படி அந்தந்தப் பகுதியில் தூய்மைப்பணியாளா்கள் தனியாா் நிறுவனத்தின் மூலம் பணியாற்றி ஊதியம் பெற்று வருகின்றனா்.
இந்தநிலையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதுகுறித்து அமைச்சா் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், திருபுவனையில் புதுச்சேரி, விழுப்புரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை காலையில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரத் துறை தூய்மைப் பணி வாகனங்கள் உள்ளிட்டவற்றை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் சமரசம் பேசினா். மேலும் அப்பகுதி அரசியல் பிரமுகா்களும் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். தூய்மைப்பணி ஒப்பந்தம் மேற்கொண்ட தனியாா் நிறுவன மேலாளரிடமும் கைப்பேசியில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து ஊதிய நிலுவையை விரைவில் வழங்க நிறுவனம் உறுதியளித்ததால் மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.