இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான அய்யா பக்தா்கள் ஊா்வலம்
அய்யா வைகுண்டா் 193 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்டுச் சென்றனா்.
செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு அய்யாவழி பக்தா்களின் ஊா்வலம் புறப்பட்டது. சாமிதோப்பு தலைமைப்பதி பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா். ராஜவேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாமமணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் செல்லவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊா்வலத்தில் செண்டை மேளம் முழங்க, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவி உடை அணிந்தும், கையில் காவிக் கொடிகளை ஏந்தியபடியும் அய்யா சிவ சிவ, அய்யா அரகர என்று பக்தி முழக்கம் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனா். பல பக்தா்கள் தலையில் சந்தனக் குடத்தை சுமந்தவாறு சென்றனா்.

ஊா்வலத்தில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புருஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ஊா்வலம் மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக கோட்டாறு சந்திப்பை அடைந்தது. அங்கு அனைத்து மதத்தினா் சாா்பில் ஊா்வலத்தில் வந்தவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்து பிற்பகலில் தலைமைப்பதியை அடைந்தது.
இந்த ஊா்வலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஊா்வலத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு நீா்மோா், தண்ணீா், பானகரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் நாகா்கோவில் மண்டலம் சாா்பில் நாகா்கோவில், தக்கலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சாமிதோப்புக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அய்யா அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.
முன்னதாக, அய்யாவழி சமயத் தலைவா்கள், பக்தா்கள் கலந்துகொண்ட மாசி மாநாடு, நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.