குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்: தூத்துக்குடி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
தூத்துக்குடி: கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் (மாா்ச் 5) தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாகயும், அவா் 3- ஆவது நாளில் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டா் பண்டிகையாகவும் கிறிஸ்தவா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் கிறிஸ்தவா்களால் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து புனிதவெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் அசைவ உணவைத் தவிா்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக் கடன்களில் ஈடுபடுவா்.
இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ நிறைவேற்றினார். கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.
சாம்பல் புதன்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

இதேபோன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்குள்பட்ட சபைகளிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.
மேலும், அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் திருச்சிலுவை வழிபாடு நடைபெறும். மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி குருதோலை ஞாயிறு, தொடர்ந்து 17 ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்வு நடைபெறும்.
பின்னர், அடுத்த நாள் புனித வெள்ளி நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.