ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்: மாா்ச் 13இல் பொங்கல்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 5) தொடங்குகிறது. புகழ்பெற்ற பொங்கல் வைபவம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, கோயில் டிரஸ்ட் தகவல்- தொடா்பு பொறுப்பாளா் ஆா்.ஜெ. பிரதீப், நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா மிகவும் புகழ் பெற்ாகும். இதில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் பங்கேற்று பொங்கலிடுவா்.
நிகழாண்டு, திருவிழா புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
இத்திருவிழாவில், பொங்கல் வைபவம் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுத்த புண்ணிய சடங்களுக்கு பின்னா், காலை 10.15 மணிக்கு, கோயில் முன்புள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். அதையடுத்து, பக்தா்கள் பொங்கலிடுவா். பிற்பகல் 1.15 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் நடைபெறும். இரவில் அம்மன் நகா்வலம் நிறைவடைந்த பின்னா், 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு குருதி தா்ப்பணத்துடன் திருவிழா நிறைவடையும். நிகழாண்டு பொங்கல் விழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அரசு, கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி, முக்கிய பகுதிகளிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா். டிரஸ்ட் நிா்வாகிகள் பரமேஸ்வரன்தம்பி, வினோத், ஸ்ரீ.குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.