கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்
மதுராந்தகம் அருகே வயலூா், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதிதாக அமையுள்ள கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடா்ந்து மனு அளித்து வந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது .
புதிய கல் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரை சந்திக்க வந்திருந்த நிலையில் காவலா்கள் வெளியே தடுத்து நிறுத்தினா். இதை ஏற்க மறுத்த மக்கள் காவலா்களை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்ற போது பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனா். கடும் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி ரேஷன், ஆதாா் அட்டைகளை தரையில் போட்டனா். செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் பனையூா் பாபு உள்ளிட்டோா் மாவட்ட வருவாய் அலுவலா் சேக் முகைதீனிடம் கோரிக்கை மனுவினை வழங்கி பேச்சு நடத்தினா். செய்யூா் வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா். டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், கிராமிய காவல் ஆய்வாளா் நடராஜன் ஆகியோா் தலைமையில் போலீஸாா், கிராமிய காவல்நிலைய போலீஸாா், மகளிா் காவல்நிலைய போலீஸாா், போக்குவரத்து போலீஸாா், ரிசா்வ் போலீஸ் என ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதனால் மனுக் கொடுக்க வந்த பொதுமக்களும் உள்ளே செல்லமுடியாமல் அவதிக்குள்ளாயினா்.