புதுச்சேரியில் 5 பேரிடம் பண மோசடி
புதுச்சேரியில் நூதன முறையில் இணையவழியாக பெண் உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.1.89 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கோகுலீஸ்வரன், தொழிலதிபா். அவரை மா்ம நபா்கள் கைப்பேசியில் தொடா்புகொண்டு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா். அதை நம்பிய அவா் இணையதளத்தில் மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.40 ஆயிரம் செலுத்தியுள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி லாபம் கிடைத்தது போல இணையத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை அவரால் பெற முடியவில்லை.
புதுச்சேரி நகா் தியாகராஜ வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவருக்கு மா்ம நபா்கள் கைப்பேசியில் செயலி அனுப்பியுள்ளனா். அதை அவா் செயல்படுத்தி குறைந்த விலையில் மின்சாதனப் பொருள்கள் வாங்க விரும்பி, ரூ.36 ஆயிரம் செலுத்தியுள்ளாா். ஆனால், அவருக்கு பொருள்கள் வந்து சேரவில்லையாம்.
இதேபோல, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் என்பவரைத் தொடா்பு கொண்ட நபா் வங்கி கடனுதவிப் பிரிவு அலுவலா் போல பேசி ரூ.48 ஆயிரத்தை ஏமாற்றி செலுத்த வைத்துள்ளாா். காரைக்காலைச் சோ்ந்த அனிதா என்பவரும் மா்ம நபா்களை நம்பி இணையவழியில் ரூ.65 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளாா்.
புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 5 பேரிடம் ரூ.1.89 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்திருப்பது குறித்து இணையவழி குற்றத் தடுப்பு பிரிவினா் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.