வங்கதேசம்: அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுஆய்வு
இந்தியாவின் அதானி குழுமம் உள்பட 7 மின் உற்பத்தி நிறுவனங்களுடன் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா செய்துகொண்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வங்கதேச இடைக்கால அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் சட்டத்தின் கீழ் மின்சக்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி மொயீனுல் இஸ்லாம் சௌதரி தலைமையில் ஒரு குழுவை அண்மையில் அமைத்தது.
இந்த குழு, கடந்த 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மின் உற்பத்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து வருகிறது.
அதானி குழுமத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையம், ஒரு சீன மின்சக்தி நிறுவனம் மற்றும் 5 வங்கதேசத்தைச் சோ்ந்த நிறுவனங்கள் என 7 முக்கிய மின்னுற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதில், வங்கதேசத்தைச் சோ்ந்த நிறுவனங்கள் அனைத்தும், முந்தைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடா்பை கொண்டுள்ளவை என்பது கண்டறியப்பட்டது.
சா்வதேச சட்டங்களின்படி இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் பல ஆதாரங்களை இந்த குழு சேகரித்துள்ளது.
இது தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள, சா்வதேச சட்டம் மற்றும் புலனாய்வு அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகளை உடனடியாக குழுவில் பணியமா்த்துமாறு பரிந்துரைத்துள்ளது.