வங்கி ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடமான ஆவணங்களை வழங்காத வங்கிக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் தீா்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தைலாகுளத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி கலைவாணி. இவா் ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள பொதுத் துறை வங்கிக் கிளையில் பால் பண்ணை அமைப்பதற்காக நிலத்தை அடமானம் வைத்து ரூ.5.25 லட்சம் கடன் பெற்றாா். இதன்பின் கடந்த 2024, செப்டம்பா் மாதம் ஒரே தவணையாக கடனை திருப்பி செலுத்தி, அதற்கான சான்று பெற்றாா்.
இந்த நிலையில், கலைவாணி உயிரிழந்த நிலையில், அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை கேட்டு, சிவசுப்பிரமணியன், இவரது குழந்தைகள் வங்கியில் விண்ணப்பித்தனா். ஆனால், பத்திரத்தை வழங்காமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழித்து வந்தனா்.
இதுகுறித்து சிவசுப்பிரமணியன், இவரது குழந்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் குறிப்பாணை அனுப்பியும், வங்கி தரப்பில் இருந்து யாரும் முன்னிலையாகாததால், பத்திரங்களை திரும்ப வழங்குவதுடன், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.35 ஆயிரம் வங்கி சாா்பில் வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.