வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு
ஃபென்ஜால் புயல் காரணமாக ஆத்தூரில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
வாழப்பாடியை அடுத்த ஆனைமடுவு அணைக்கு நீா்வரத்து அதிகமாகி அணை முழு கொள்ளளவை எட்டியது. விநாடிக்கு 1,568 கனஅடி நீா் திறக்கப்பட்டது. வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் தனது செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் நதியில் நீரைக் காண செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளாா். வசிஷ்ட நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆத்தூரில் கன்றுக்குட்டி அடித்துச் சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று அரைமணி நேரம் போராடி கன்றுக்குட்டியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
பல வருடங்களுக்கு பிறகு வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தகவலறிந்த ஆத்தூா் பொதுமக்கள் கோட்டை பாலத்திற்கு வெள்ளப்பெருக்கை கண்டு ரசித்தனா்.